பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

உள்ளம் குளிர்ந்தது

ஓதுதல், பொருள் தெரிந்து படித்தல் கற்றல். பொருளில் உள்ள கருத்தை நன்கு உணர்ந்து, அதனைப் பிறருக்கும் சொல்கின்ற ஆற்றல் பெற்று, அதன்படி ஒழுகுகின்றவர்கள் அறிந்தவர்கள். இங்கே அறிந்தவர் என்பது ஓதி உணர்ந்தவர் என்றே பொருள் செய்வதற்குரியது. சர்க்கரையைப் பற்றித் தெரிந்து கொள்வது வேறு அதன் சுவையை உணர்ந்து கொள்வது வேறு. அந்த வகையில் ஒரு கவியையாவது பலகாலம் படித்து அதன் பொருளை எல்லாம் நன்கு உள்ளத்தில் பதித்துத் தெளிந்து, பிறரையும் தெளிவிக்கும் ஆற்றல் பெற்று, அதனால் பெறக்கூடிய ஒழுக்கத்தில் நின்று பயன் பெறுவதையே கற்று அறிதல் என்று இங்கே சுருக்கமாகச் சொல்கிறார்.

ஒரு கவி

ரு பாட்டைக் சுற்றமாத்திரத்தில் இத்தகைய நற்பயன்கள் எல்லாம் எப்படிக் கிடைக்கும்? மனிதர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல குணத்தை மேற்கொண்டாலேயே மற்ற நல்ல குணங்கள் எல்லாம் அதனோடு சாரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். மெய்யையே பேசிய அரிச்சந்திரனுக்குப் பிற குணங்கள் எல்லாம் தாமே வந்து அமைந்தன. ஆகிம்சையை மேற்கொண்ட காந்தியடிகளுக்கு மற்றக் குணங்கள் எல்லாம் நிரம்பி இருந்தன.

"கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்"

என்று தாயுமானவர் சொல்கிறார். அருண்கிரிநாதப் பெருமான் உலகத்தார் உய்யும்பொருட்டுப் பாடிய கந்தர் அலங்காரத்தில் ஒவ்வொரு பாட்டும் சிறந்த கருத்தைக் கொண்ட மனிதர்களுடைய குற்றங்களை எடுத்துச் சொல்லி, இன்ன வகையில் அவற்றினின்றும் நீங்கி வாழ வேண்டுமென்பதைப் பாடல்கள் சொல்கின்றன.