பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

உள்ளம் குளிர்ந்தது

கிடையாக வீழ்ந்து வணங்கினார்; எழுந்து, "திருநீறு கொடுங்கள்" என்று கையை நீட்டினார்.

"நான் துறவி அல்லவே? மடாதிபதியும் அல்லவே! ஆதி சைவராக இருந்தாலும் திருநீறு கொடுக்கலாம். நான் உங்களைப் போன்ற சாமான்ய ஆசாமி. விபூதியை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று விபூதிப் பையை அவரிடம் நீட்டினேன்.

அவர், "இல்லை, இல்லை; உங்கள் கையினால் கொடுங்கள். அப்போதுதான் எனக்குத் திருப்தியாக இருக்கும்" என்று சொன்னார்.

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என்று கேட்டேன். "உங்கள் கையினால் வாங்கவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. காரணம் இருக்கிறது. சொல்கிறேன். முதலில் கொடுங்கள்" என்றார்.

அவர் விருப்பப்படியே அவருக்குத் திருநீறு கொடுத்து பையைச் சுருட்டி வைத்துக்கொண்டேன்; "என்ன சொல்ல வருகிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அது பெரிய விஷயம்; கேளுங்கள்" என்று அவர் ஆரம்பித்தார்.

"நாம் காட்டின் வழியே வரும்போது கார் மிகமிக வேகமாக வந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று அவர் கேட்டார்.

"கார் எங்கும் நிற்காமல் நல்ல வேகத்துடன் வந்ததாகத்தான் எனக்குத் தோன்றியது" என்றேன்.

"நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் இவ்வளவு வேகத்தில் எப்போதும் காரை விட்டது இல்லை. அவசியமும் நேர்ந்தது இல்லை. இன்றோ உயிருக்குப் பயந்து இத்தனை வேகத்தில் விட்டேன்" என்று அவர் சொன்னார்.