பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

உள்ளம் குளிர்ந்தது

தடுமாறினேன். வண்டியை நிறுத்திவிட்டு யானை போன பிறகு ஓட்டலாமா என்ற எண்ணம் வந்தது. நீங்கள் அப்போது முருகனைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தீர்கள். அந்தப் பாட்டு என் காதில் விழுந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் மறந்து நீங்கள் பாடும்போது எனக்கும் கொஞ்சம் உணர்ச்சி உண்டாயிற்று. முருகன் காப்பாற்றுவான், காரைச் செலுத்தலாம் என்று எண்ணி வேகமாக விட்டேன். ஒருவாறு அந்த இடத்தைக் கடந்து அப்பால் வந்துவிட்டேன். ஆனால் பின்னால் வருகிற ஆபத்து அப்போது தெரியவில்லை."

"என்ன, மறுபடியும் ஆபத்தா?" என்று நான் கேட்டேன்.

"ஆம். இது முன்னதைவிட மிகவும் கடுமையான ஆபத்து. ஆணும் பெண்ணுமாகிய இரண்டு யானைகள் சேர்ந்திருந்தால் அதைக் கலைக்கிறவனுக்கு உண்டாகும் ஆபத்தைச் சொல்ல முடியாது. அப்படி இரண்டு யானைகள் சாலைக்கு அருகில் மரத்துக்குப் பின்னாலே நின்று கொண்டிருந்ததை நான் வாசனையால் உணர்ந்தேன். இதுவும் எங்களுக்கு அநுபவம். இந்த முறை நிச்சயம் நம்முடைய காருக்கு ஆபத்து என்று எண்ணினேன். யானை தன்னுடைய காலால் பக்தைத் தள்ளுவதுபோலக் காரை உருட்டிவிடும். கார் வேகத்தைவிட உங்கள் பாட்டு வேகம் மிகுதியாக இருந்தது. ஆண்டவன் உங்கள் வாயிலாக அப்போதும் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தான். என் உள்ளம் நடுங்கினாலும் கை நடுங்கவில்லை. இறுகச் சக்கரத்தைப் பிடித்தேன். உங்கள் பாட்டுக் காது வழியாகப் புகுந்து தைரியத்தை ஊட்டியது. எப்படியாவது இதைத் தாண்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தில், ஓட்ட முடியாத வேகத்தில் காரை ஓட்டினேன். நல்ல வேளையாக அக் கண்டத்தையும் தாண்டிவிட்டோம்."