பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

உள்ளம் குளிர்ந்தது



வாழ்வில் அமையும் பயன்

ந்த அற்புதமான நிகழ்ச்சி அருணகிரிநாதப் பெருமான் பாடிய இந்தப் பாடலுக்கு ஒரு நல்ல விளக்கத்தைத் தந்தது என்று நான் சொல்வதைப் படிக்கிற அன்பர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். இது கட்டுக் கதை அல்ல. அநுபவத்தில் நான் கண்டது. என்னுடன் வந்த அன்பர்களும் இதை உணர்வார்கள்.

தெய்வத் தன்மை நிறைந்த பெரியவர்களுடைய திருவாக்கில் சொல்லுக்குக் காணுகிற பொருளைவிட அநுபவத்தில் காணுகிற பொருள்தான் சிறந்தது. மற்றவர்களின் பாடல்கள் எல்லாம் சொல்லுக்குரிய பொருளோடு அமைந்துவிடும். இன்னும் சற்றுச் சிறப்பாக நின்றால் அதற்குமேலே சற்று உணர்ச்சியைத் தரும். பின்னும் சென்று வாழ்க்கையில் சீரிய பயனைக் கொடுக்க வேண்டுமென்றால் அந்தச் சொல் மிகச் சிறப்பாக இருக்கவேண்டும். அப்போது அதற்குச் சொல் என்ற பெயர் இல்லை. அதுதான் மந்திரம். பாரதியார் கூட,

"மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்"

என்று சொல்லி இருக்கிறார் அல்லவா?

மந்திரம் என்ற சொல்லுக்குத் தன்னை நினைப்பாருடைய துன்பத்தைப் போக்குவது என்பது பொருள். இலக்கிய இன்பத்தோடு மாத்திரம் நில்லாமல், பக்தி உணர்ச்சியை வழங்குவதோடு அமையாமல், சிறந்த வள வாழ்க்கையையும் அருளாளர்களுடைய திருவாக்கு நமக்குக் கொடுக்கும் என்பதைத் திருமுறைகளைப் பாராயணம் செய்த பல பெருமக்கள் உணர்வார்கள். திருமுறை அருளிய அருளாளர்களைப் போலவே கந்தர் அலங்காரத்தை நமக்கு வழங்கிய அருணகிரிநாதப் பெருமானும் சிறந்த அவதார புருஷர். ஆகையால் அவருடைய திருவாக்கும்