பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

உள்ளம் குளிர்ந்தது

கண் முதலிய இந்திரியங்களால் இறைவனுடைய திருத் தொண்டுகளில் ஈடுபடுவதன் பயன், நம் மனம் அவனோடு ஒன்றுபடுவதுதான். இறைவனை மனத்தில் நினைப்பதைத் தியானம் என்று சொல்வார்கள். உள் முகத்தில் தியானம் பண்ணப் பண்ண உள்ளொளி உண்டாகும். புறத்தில் லட்ச தீபம் போட்டுக் கண்டாலும் அதனால் அப்போதைக்கு ஒரு கிளுகிளுப்பு உண்டாகுமே யன்றித் தனித்துக் கண் மூடிக் கண்டால் இருட்டுத்தான் உண்டாகும். கூட்டத்தில் கூடி நின்று இறைவனைக் காணும்போது, சிறிது கண்மூடி அவன் உருவத்தை உள்ளே காணப் பயிலவேண்டும். அப்பால் உள்ளத்தில் அவன் உருவத்தைத் தனித்து இருந்து காணப் பழகினால் உள்ளொளியைத் தரிசித்து அதனிடையே இறைவன் திருவுருவத்தை காணலாம். இப்படிப் பல காலம் பயிற்சி செய்தாலன்றிக் கண்ணை மூடியவுடன் இறைவன் திருவுருவம் காண முடியாது. உள்முகமாக இறைவன் திருவுருவத்தைப் பார்ப்பதுதான் இறைவனோடு நாம் ஒன்றுபட வழியாகும். அதற்காகவே ஆண்டவனை உருவம் உடையவனாகத் தியானிக்கிறோம். மனம் எதையாவது நினைக்க வேண்டுமானால் அதற்கு ஏதேனும் உருவம் இருக்கவேண்டும். உருவம் இல்லாத பொருளை மனம் பற்றிக்கொள்ள இயலாது. ஆண்டவன் பல் வடிவங்களை எடுத்துக்கொண்டு அருள் செய்வதற்குக் காரணம், அடியார்கள் மனத்தில் புகவேண்டும் என்பது தான்.

உருவமும் பாடலும்

ருணகிரியார் முருகனுக்கு அன்பு செய்து அவனுடைய திருவுருவத்தை நன்கு தரிசித்தவர். வெளியே தரிசித்த திருவுருவத்தை, உள்ளே கண்டு அதன் பெருமையை உணர்ந்து இன்புற்றவர். நாம் அந்த நிலையை அடைய