பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

3

வேண்டுமானால் மெல்ல மெல்லச் சாதனை செய்து பயிற்சி பெறவேண்டும். இறைவனுடைய திருவுருவத்தை நன்றாக உள்ளத்தில் உணர வேண்டும். அப்படி உணர்வதற்கு நமக்கு உபயோகமாக இருப்பவை இரண்டு பொருள்கள். ஒன்று இறைவனுடைய திருவுருவம்; மற்றொன்று அந்தத் திருவுருவத்தைப் பற்றிச் சொல்லும் பாடல். ஒரு குழந்தையைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தக் குழந்தையின் உருவம் நம் மனத்தில் பதியும். குழந்தை ஊருக்குப் போய் இருக்கும்போது அதனை நினைத்தால் அதன் உருவம் உள்ளத்தில் வரும். அதுபோல் இறைவனுடைய உருவங்களைக் கோயில்களில் பார்க்கிறோம்; படத்தில் பார்க்கிறோம். அவற்றை எல்லாம் நெஞ்சில் நிறுத்திக் கண் மூடித் தியானம் செய்து பழகியிருக்கிறோம். அந்த உருவம் உள்ளத்தில் நன்கு பதிந்து நிற்க, திருப்பித் திருப்பி அந்த உருவத்தை உள்ளத்தில் கொண்டுவந்து நிறுத்த முயலவேண்டும். பெரியவர்களுடைய பாடல்களில் ஆண்டவனுடைய திருவுருவத்தை வருணிக்கும் இடங்களை நினைவுபடுத்திக்கொண்டு, அவற்றைச் சொல்லிக்கொண்டே வந்தால் அப்போது ஆண்டவனுடைய வடிவத்தை உள்ளத்தில் ஓரளவு பதித்துக் கொள்ளலாம்.

மந்திர உபதேசம் செய்து கொள்கிறவர்கள் அந்த மந்திரத்தின் தேவதையைத் தியானம் செய்வதற்கு உதவியாக ஒரு சுலோகம் இருக்கும். அதைத் தியான சுலோகம் என்று சொல்வார்கள். மந்திரம் எந்த மூர்த்தியைக் குறிக்கிறதோ அந்த மூர்த்தியின் உருவத்தைத் தியான சுலோகம் வருணிக்கும். தியான சுலோகத்தைச் சொல்லிக்கொண்டு அந்த வடிவத்தை மெல்ல மெல்ல உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பதித்துக் கொண்டு மந்திரத்தை ஜபித்தால் மெல்ல மெல்ல ஒளி பரவி அந்தத் திருவுருவமும் ஒருவாறு