பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

உள்ளம் குளிர்ந்தது

அநுபவம் பெறாதவர்கள் குருவாக இருந்தால் மாணாக்கர்களுக்கு ஐயம் நிகழும்போது அதைத் தீர்க்கும் வன்மை அவர்களுக்கு இராது. அநுபவம் உள்ளவர்களாலேயே எல்லா வகையான ஐயத்தையும் போக்க முடியும். அநுபவம் என்பது பல கால முயற்சியின் பயனாக வருவது. அதனால் சிறந்த ஆசிரியர்கள் பலகாலம் சாதனை செய்தவர்களாக வயசில் மிகுந்தவர்களாக இருப்பது இயற்கை.

தெய்விகக் குருநாதர்

து உலக இயலோடு ஒட்டிய குருமார்களுக்கு அமைந்தது. ஆனால் தெய்விகக் குருநாதர்களுக்கு இந்த விதி ஒவ்வாது. தட்சிணாமூர்த்தியைக் குருமூர்த்தி என்று சொல்வார்கள். பொதுவாகக் குரு என்று சொன்னால் அது தட்சிணாமூர்த்தியைத்தான் குறிக்கும். குருநாதன் என்னும்போது அது மேலான குருவாகிய முருகப் பெருமானைக் குறிக்கும். தட்சிணாமூர்த்தியைப்பற்றி ஒரு சுலோகம் வட மொழியில் உண்டு. 'ஆல மரத்தினடியில் தேசு நிறைந்த திருமுகத்துடன் தென்முகக் கடவுள் வீற்றிருக்கிறார். அவருக்குக் கீழ் நான்கு மாணாக்கர்கள் அமர்ந்திருக்கிறார்கள். என்ன ஆச்சரியம்! குருநாதர் இளையவராக இருக்கிறார்; மாணாக்கர்கள் கிழவர்களாக இருக்கிறார்கள்!' என்று அந்தச் சுலோகம் சொல்கிறது. உலக இயலுக்கு மேற்பட்ட அநுபவத்தில் சிறந்த முனிவர்கள் மாணாக்கர்களாகவும் இளமையுடைய தட்சிணா மூர்த்தி குருநாதனாகவும் இருப்பதைக் காண்கிறோம். தோற்றத்தில் தட்சிணாமூர்த்தி இளமை உடையவரானாலும் அவர் காலம் கடந்த பேராளர். அவர் தோற்றத்தில் இளமையுடையவர்; அநாதி காலமாக இளமையோடு இருக்கிறவர் அவர்.