பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உள்ளம் குளிர்ந்தது

குமர குருபரன்

த்தகையவனே முருகப் பெருமானும். அவன் பின்னும் இளமையுடையவன். சின்னஞ்சிறு வடிவுடன் மெய்ஞ்ஞான உபதேசம் செய்கின்ற குருமூர்த்தி. குருநாதர்களுக்குள் சிறந்த குருநாதன். ஆகையால் அவனைக் குருபரன் என்று சொல்வார்கள். பரன் என்பது மேலானவன் என்னும் பொருளை உடையது. எல்லாக் குருநாதர்களுக்கும் மேலான குருநாதனாகையால் அவன் அந்தத் திருநாமத்தைப் பெற்றான். குமர குருபரன் என்று நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். அந்தக் குமர குருபரனே அருணகிரியாருக்கு உபதேசம் செய்தான். பிராயத்தில் முதிர்ந்த குருநாதர்கள் நிதானமாக மெல்ல மெல்ல உபதேசம் செய்வார்கள். அவர்கள் மாணாக்கனை நோக்கி வரும்போது நிதானமாக வருவார்கள். இங்கே குழந்தைக் குருநாதனாகிய முருகன் அருணகிரியார் திருவுள்ளத்தில் கருணை வேகத்தோடு வந்து குதித்தானாம். அவனுடைய திருவுருவம் எளிதிலே உள்ளத்தில் வந்து நின்றதாம்.

குருவடிவாய் வந்து என் உள்ளம்

குளிரக் குதிகொண்டவே

என்று பாடுகிறார்.

உள்ளம் குளிர்தல்

முருகப் பெருமானுடைய உருவம் திருவுள்ளத்தில் வந்து நின்றவுடன் மனத்தில் ஒரு குளிர்ச்சி உண்டாயிற்று. மழை பெய்தால் உடனே வெப்பம் மாறிக் குளிர்ச்சி உண்டாவது போல், கருணையே உருவாகிய முருகப் பெருமான் மனத்தில் வந்து காட்சி கொடுத்தவுடன் அங்கேயுள்ள தாபங்கள் மாறி ஒரே குளிர்ச்சி உண்டாகி விட்டது. மனத்தில் மூன்று வகையான தாபங்கள் உண்டு.