பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உள்ளம் குளிர்ந்தது

பார்கள். இறைவனுடைய திருவுருவப் பேரழகு முழுவதையும் கண்டு இன்புற்றாலும், நம்மை ஆட்கொள்ளும் புகலிடம் அவனுடைய திருவடியே என்பதைக் கருதி அதையே முதலில் பற்றிக் கொள்ளவேண்டும்.

தண்டையும் சிலம்பும்

ருணகிரிநாதப் பெருமான் முதலில் முருகனுடைய திருவடியைக் காட்டுகிறார். அந்த அடி சின்னஞ்சிறு குழந்தையின் அடி. அதனை எப்படித் தெரிந்துகொள்வது? அடுத்தபடி சொல்லும் அடையாளத்தால் அது புலனாகும்.

  திருவடியும் தண்டையும் சிலம்பும்.

முருகப்பெருமானுடைய திருவடி தண்டையும், சிலம்பும் அணிந்திருக்கிறது. குழந்தைத் திருவுருவத்தில் எழுந்தருளுவான் அவன். ஆதலின் அந்த அணிகள் அமைந்திருக்கின்றன. நடராஜப்பெருமானுக்கும் சிலம்பு உண்டு. அவன் நடனம் ஆடுகின்றவன்; ஆகையினால் அதற்கேற்றபடி தாளம் அமைவதற்குச் சிலம்பை அணிந்திருக்கிறான்.

"மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

என்பது பெரியபுராணம். அடியார்களுக்கு அருள் வழங்கும்போது தான் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்கு அடையாளமாகச் சிலம்பை அணிந்திருக்கிறான். காதினால் ஒலியைக் கேட்டு, அது எங்கிருந்து வருகிறதென்று ஆராய்ந்த பிறகு திருவடியைக் காணலாம். அதுபோல் முருகன் எழுந்தருளும்போது "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்பதுபோலத் தண்டையும் சிலம்பும் ஒலிக்கின்றன. அந்த ஒலி எம்பெருமான் எழுந்தருளுகிறான் என்பதைக் காட்டி, அவன் திருவடி எங்கே என்ற ஆராய்ச்சியை உண்டாக்குகிறது.