பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

11

இறைவனுடைய திருவடியில் தண்டையாகவும், சிலம்பாகவும் இருப்பது வேதந்தான். இறைவனைக் காட்டுவதற்கு அநாதிகாலமாக நமக்கு உதவியாக இருக்கும் நூல் வேதம். அது நேர்முகமாகக் காட்டாவிட்டாலும் உண்மையான தத்துவத்தை எடுத்துச் சொல்லும் அரிய நூல். எல்லா நூல்களுக்கும் ஆதியாகவும், தனக்கு ஆதி இல்லாததாகவும் இருப்பது வேதம். ஆண்டவனுடைய திருவடியைக் காட்டுவதற்கு அது நமக்குத் துணைசெய்கிறது. இறைவனுடைய திருவடிக்கு அணியாக நின்று தம்முடைய ஒலியினால் தண்டையும் சிலம்பும் அந்தத் திருவடியைக் காட்டுகின்றன. வேதம் செய்கிற காரியத்தைக் காலில் அணிந்திருக்கும் அவ்விரண்டும் செய்கின்றன; ஆகையினால் வேதமே தண்டையாகவும், சிலம்பாகவும் இருக்கின்றது என்று சொல்வார்கள்.

இறைவனுடைய திருவடியைக் கண்ட பிறகு நம்முடைய பார்வை மேலே எழும்புகிறது. மனிதனுடைய பார்வை வரவர மேலே போகவேண்டும். முறையாக அடியிலிருந்து போனால்தான் உச்சி வரையில் எட்டும். ஆண்டவனுடைய திருவடி எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது.

"பாதாளம் ஏழினும்கீழ் சொல்கழிவு பாதமலர்"


என்று மணிவாசகப்பெருமான் பாடுவார். எல்லாவற்றையும் திருவடி தாங்கிக்கொண்டிருக்கிறது என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்தாலன்றித் தாங்குவது என்பது அமையாது. ஆகையால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் தனக்கு மேல் வைத்துத் தான் எல்லாவற்றுக்கும் கீழாக நின்று தாங்கும் திருவடி அது. அப்படியுள்ள ஆதாரப் பொருளை முதலில் கண்டு, அப்பால் நம் கண்ணையும் கருத்தையும் மேலே எழுப்ப வேண்டும்.