பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உள்ளம் குளிர்ந்தது

வடிவேல்

முதலில் திருவடியைக் கண்டு, பின்பு ஒலியை விளைவிக்கும் தண்டையையும் சிலம்பையும் கண்டு நிற்கும் நாம், அந்தத் திருவடிக்கு அருகில் வேலின் ஒரு முனை அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். முருகப்பெருமானது திருக்கையில் ஞானசக்தியாகிய வேல் இருக்கிறது. அது அவனுடைய திருவுருவத்தை ஒட்டி அமைந்து விளங்குகிறது. திருவடிமுதல் திருமுடிவரையில் அது செல்கிறது. அது அவன் திருவுருவ எல்லையைக் காட்டுகிறது. வேலையே ஏணியாகக் கொண்டு நம்முடைய கண் மெல்ல மெல்ல ஏறினால் முருகப்பெருமான் திருவுருவம் முழுவதையும் ஒருவாறு பார்த்துவிடலாம்.

இதுவும் ஒரு குறிப்பை உடையது. வேலே ஞானம் என்று சொல்வார்கள். இறைவனுடைய தரிசனம் பெற வேண்டுமானால் ஞானத்தை அடையவேண்டும். ஞானம் என்பது ஒரேமாதிரி இருப்பது அல்ல. வரவர அறிவு மிகுதியாகும்போது தெளிவும் மிகுதியாகிறது. தெளிவு என்பது பொருள்களைப் புலப்படுத்தும். ஐயம் நீங்கிப் பொருள் புலப்படும் தெளிவு மிகுதியாக ஆக இறுதியில் எல்லா ஐயங்களும் நீங்கிப் பொருள்கள் யாவும் தெளிவாகும்; முடிந்த முடிவில் கடவுளைத் தெளிந்து அநுபவிக்கும் நிலை வரும். அதுவரைக்கும் ஞானம் படிப்படியாக ஏறிவரும்.ஞான சக்தியாகிய வேலைக் காணும்போது நாம் மெல்ல மெல்லக் கீழே இருந்து படிப்படியாக ஏறுகிறோம். ஆண்டவனுடைய திருவடியை ஆதாரமாகக் கொண்டு, பிறகு ஞானம் என்னும் ஏணியில் மெல்ல மெல்ல ஏறுகிறோம். இறைவனுடைய திருவடியே ஞானமாக நிற்பது தான். அது ஞானப் பொய்கையானால் வேலை ஞான ஆறு என்று சொல்லலாம்.