பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உள்ளம் குளிர்ந்தது

அப்பால் தோளை நாம் காண்கிறோம். முருகப்பெருமான் பன்னிரண்டு தோள்களை உடையவன்.

"முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்"

என்று அந்தப் பன்னிரு தோள்களைத் துணையாக முன் ஒரு பாட்டில் சொன்னார்.

இறைவனுடைய புஜபல பராக்கிரமம் ஆருயிர்க் கூட்டங்களுக்குப் பகையானவர்களை மாய்ப்பதற்காக அமைந்தது. முருகனுக்கு என்று பகை யாரும் இல்லை. எல்லோரும் நண்பர்கள், அல்லது குழந்தைகள். ஆயினும் நல்லவர்களுக்குத் தீங்கு செய்யும் பொல்லாதவர்களை அவன் தண்டித்து ஒறுக்கிறான். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமக்குள் சண்டை பிடிக்கும்போது, கொடியவனாக இருக்கும் பிள்ளையைத் தந்தை ஒறுத்து அடக்குவது போல, முருகன் சுரர்களுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு புரிந்த அசுரர்களை அடக்கி ஒடுக்கினான். அப்படி ஒடுக்கும்போது அவனுடைய புய வலிமை பயன் பட்டது. தன்னுடைய பகையை மாற்றுவதற்காக அந்த வலிமையை அவன் கொள்ளவில்லை. தன்னுடைய குழந்தைகள் பகை தீர்ந்து இன்பத்தோடு வாழவேண்டு மென்பதற்காக அவன் பன்னிரு தோள்களை உடையவனாக இருக்கிறான். இரண்டு தோள்களை உடையவர்களுக்கு ஆண்மை உண்டு. பன்னிரண்டு தோள்களை உடையவன் எல்லோரிலும் பேராண்மை உடையன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. தோள் வீரத்திற்கு அடையாளமானால் மிகுதியான தோள் மிகுதியான வீரத்திற்கு அடை யாளம் என்பதில் ஐயம் ஏது ?

கண்ணபிரான் கீதையில், "வீரர்களுக்குள் நான் முருகனாக இருக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறான். அவனுடைய வீரமிகுதியை, வீரத்தின் இருப்பிடமாகிய