பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

உள்ளம் குளிர்ந்தது

போலக் கனவிலே காண்கிறோம். அதன் பயனாக உண்மையிலேயே உடம்பில் வேர்வை வருகிறது. தூக்கத்தில் குழந்தைகள் பயந்து கொண்டு சிறுநீர் விட்டுவிடுவதைப் பார்க்கிறோம்.

சாயங்கால வேளையில் ஒளியும் இருளும் கலந்திருக்கின்றன. அதுபோல் கனவில் பொய்யான நிகழ்ச்சியும் மெய்யான அனுபவமும் கலந்திருக்கின்றன. அந்தக் கனவு விழிப்பு நிலையும் அன்று; தூக்க நிலையும் அன்று. தூங்கினால் எல்லாவற்றையும் மறந்து தூங்குகிறோம். விழித்தால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படி விழித்துக் கொண்டு பார்க்கிற பார்வை உண்மையான பார்வை என்று சொல்ல முடியாது. கண்ணால் காண்பது எல்லாம் மெய் அல்ல; காதால் கேட்பது எல்லாம் உண்மை அல்ல என்ற பழமொழி உண்டு.

சினிமாவும் மன நிலையும்

ரு சினிமாப் படத்தைப் பார்க்கிறோம். பல பேர்கள் பல விதமாக ஓடியாடிக் காரியங்கள் செய்வதைக் காண்கிறோம். நாம் பார்க்கும் ஆளுக்கு உயரம், பரிமாணம் எல்லாம் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அங்கே பரிமாணமோ கனமோ இல்லை. அகல நீளம் மாத்திரம் இருக்கின்றன. திரையில் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது பரிமாணம் உள்ள பொருள்களைப் போலவே எல்லாம் தோன்றுகின்றன. ஆனாய் அந்த ஆட்டம் நின்றவுடன் விளக்குப் போட்டால் நிற்கிறது வெறும் திரைதான் என்பது தெரிய வரும். படம் ஓடும்போது கூட அகல நீளப் படந்தான் இருக்கிறதே தவிரப் பரிமாணப் படம் இல்லை. தோற்றம் மாத்திரம் பரிமாணத்துடன் தோன்றுகிறது. சினிமாப் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒருவர் திரையைப் பார்த்தால்