பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

31

படம் ஓடிக்கொண்டிருக்கிறபோது திரையில் நடக்கிறது தோற்றந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அல்லது படம் முடிந்த பிறகு பார்த்தாலும் திரைதான் உண்மையாக இருக்கும் பொருள் என்று தெரிய வரும். உலகத்திற்கு ஆதியும் அந்தமும் ஆகிற நிலையில் யாராவது இருந்து பார்த்தால் மற்றவை எல்லாம் சினிமா ஓட்டம் போலப் பொய்யானவை என்று தெரிய வரும்.

கானல் உவமை

லகம் தோற்றுகிற தோற்றத்திற்குக் கானல் நீரை உவமையாகச் சொல்வது வழக்கம். வெப்பம் மிகுந்து இருக்கும்போது அலை அலையாக நீர் ஓடுவது போலத் தோற்றும்; அதுதான் கானல். கானலைப் பார்க்கிறவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். கானலை நீராகக் கண்டு ஏமாந்து போகிறவர்கள் ஒரு வகை; அது கானல்தான் என்று தெரிந்துகொண்டபிறகும் அதைப் பார்க்கிறவர்கள் ஒரு வகையினர். இரண்டு பேருக்கும் கானல் தோற்றம் இருக்கும். அவர்கள் கண் பார்வையில் வேறுபாடு இல்லை. ஆனால் அவர்களுடைய கருத்தில்தான் வேறுபாடு இருக்கிறது. கானல் என்று உணராதவன் நீர் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பான். கானல் என்று தெரிந்துகொண்டவன் அது வெறும் கானல் என்பதை உணர்ந்திருப்பான். இரண்டு பேருடைய கண்ணுக்கும் தோன்றும் தோற்றம் ஒன்றுதான். ஆனால் உணர்விலே வேறுபாடு உண்டு. அதுபோல் உலகத்தில் வளைய வருகின்ற நமக்கு நடக்கின்றன எல்லாம் உண்மை என்று தோற்றும். அதே உலகத்தில் இருக்கும் ஞானிக்கும் அந்தத் தோற்றம் உண்டு. ஆனால் அவை யாவும் வெறும் தோற்றந்தான் என்ற தெளிவு அவனிடம் இருக்கும்.