பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உள்ளம் குளிர்ந்தது

மெய்யும் பொய்யும்

நாம் ஒரு சினிமாப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சினிமாக் கதையில் சண்டை நடக்கிறது. அதைப் பார்த்துக் குழந்தை வீல் என்று அழுகிறது. யாரோ கதையில் இறந்து போகிறான். நாலு பேர் சேர்ந்து அழுகிறார்கள். நமது குழந்தையும் அழுகிறது. அதற்கு அங்கே நடப்பது வெறும் தோற்றம் என்ற அறிவு இல்லை. நமக்கோ அது நன்றாகத் தெரியும். சண்டை நடந்தாலும், சாவு நடந்தாலும் நாம் அஞ்சுவதும் இல்லை; அழுவதும் இல்லை. நாம் எப்பொழுதும் போலவே அமர்ந்திருக்கிறோம். உலக இயலில் குழந்தையைப் போல இருப்பவர்கள் நாம். பெரியவர்களைப் போல இருப்பவர்கள் ஞானிகள். அவர்கள் எப்போதும் நடுநிலையில் இருப்பார்கள்.

அறிவும் அறியாமையும்

நாம் தூங்கும்போது ஒன்றும் அறியாமல் தூங்குகிறோம். விழித்திருக்கும்போது எல்லாவற்றையும் கண்டு உவகையால் துள்ளி, துக்கத்தால் சாம்பிக் கொண்டிருக்கிறோம். ஞானிகளுக்கோ தூக்கம், விழிப்பு இரண்டும் ஒன்றுதான். தூக்க நிலையைக் கேவலம் என்றும், விழிப்பு நிலையைச் சகலம் என்றும் சொல்வார்கள். அவர்கள் இந்த இரண்டு அவஸ்தைகளையும் கடந்தவர்கள். தூக்கத்தில் எப்படி இந்திரியங்கள் எல்லாம் அடங்கி நாம் தூங்குகிறோமோ அப்படி அவர்கள் விழித்துக்கொண்டிருக்கும்போது இருக்கிறார்கள். விழித்திருந்தாலும் அவர்கள் மனம் அலையாது. அவர்களுக்குத் தூக்கமும் இல்லை; விழிப்பும் இல்லை. இரவும் இல்லை; பகலும் இல்லை.