பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

35

ந்த மாதிரி ஒரு நிலையை எதையேனும் உபமானம் சொல்லி விளக்க முடியாது. அதை அநுபவித்துத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஒரு பெரிய சொத்தை எளிதில் பெற்றவனுக்கு இராத்திரியில் தூக்கம் வருவது இல்லை. ஆனால் அவன் மனம் மிகவும் உற்சாகத்தோடு இருக்கும். அதைப் போன்ற நிலை என்று சொல்லலாம். ஆனால் அதுகூடச் சரியான உபமானமாகாது. மன நிறைவு பெற்றபோது அதிக அலைச்சல் இல்லாத நிலையில் மனம் இருக்கும். அது போன்றது என்று சொல்லலாம். அது கூடச் சரியான உவமையாகாது. மனம் அலையாமல், எதையும் நினையாமல், தூக்கம் கொள்ளாமல் ஒன்றையே பற்றிக்கொள்ளும் நிலை அது. இரவு பகல் அற்ற அந்த இடத்தை நீ எனக்குக் காட்டவேண்டுமென்று அருணகிரியார் பிரார்த்திக்கிறார்.

இராப்பகல் அற்ற இடம் காட்டி.

துதித்தல்

ந்த இடத்தை அவன் காட்டினால் போதுமா? அந்த இடத்தில் நின்று என்ன செய்ய வேண்டும்?

யான் இருந்தே துதிக்க.

இரவும் பகலும் அற்ற இடத்தைக் காட்டி, நான் அந்த இடத்தில் இருந்து உன்னைத் துதிக்கும்படியாகச் செய்ய வேண்டும் என்கிறார். இறைவன் திருவருளால் கிடைக்கிற இரவும் பகலும் அற்ற இடத்தில் மயக்கம் இராது. புற எண்ணங்கள் மோதா. சகல கேவலம் கடந்த நிலை உண்டாகும். அந்த இடத்தில் நாம் நிற்க வேண்டுமானால் எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும்.