பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

உள்ளம் குளிர்ந்தது

பற்றுக்கோடு

இராப்பகல் அற்ற இடம்காட்டி
யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டையத் தாள் அருளாய்.

எம்பெருமானுடைய திருவடியைப் பற்றிக் கொண்டால், இராப்பகல் அற்ற இடத்தில் நெடுநேரம் இருக்கலாம்.

முருகனுடைய பாதம் குரா மலரையும், தண்டையையும் அணிந்திருக்கிறது. குரா முருகப்பெருமானுக்குரிய மலர். தண்டை உமா தேவியார் தன் குழந்தைக்கு அணிந்த ஆபரணம். அவன் தன்னுடைய அன்னை சூட்டிய தண்டையை மாத்திரம் அணிந்திருக்கவில்லை; அதோடு அன்பர்கள் பூசிக்கின்ற குரா மலரையும் அணிந்திருக்கிறான். அன்னை புனைந்த தண்டை மிகச் சிறந்தது. அதனுடன் அன்பர் புனைந்த குரா மலரையும் அணிந்திருக்கிறான். அத்தகைய திருவடியை நீ தரவேண்டுமென்று பிரார்த்திக்கிறார்.

அந்தத் திருவடி எதற்காக? மனம் பற்றிக் கொள்வதற்காக. மனம் ஓரிடத்தில் நிற்கவேண்டும். எதையும் பற்றிக்கொள்ளாமல் அது நிற்காது. ஒன்றையும் பற்றிக் கொள்ள முடியவில்லையென்றால் தூக்கம் வந்துவிடும். அல்லது பலவற்றைப் பற்றிக் கொண்டு வீதியில் போய்க் குறும்பு செய்யும். இந்த இரண்டு நிலையும் இல்லாமல் கட்டுப்பட வேண்டுமானால் அதை ஒன்றோடு சேர்க்க வேண்டும். அது ஆண்டவனுடைய திருவடி. "உன் திருவடியை என் உள்ளத்தைக் கட்டும் தறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்" என்பது போலச் சொல்கிறார்.

இராப்பகல் அற்ற இடம் கிடைத்தால் மட்டும் போதாது. அங்கே இருக்கவேண்டும். இருப்பதாவது உடம்பும் உள்ளமும் அலையாமல் அமைந்திருப்பது. பின்பு