பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

உள்ளம் குளிர்ந்தது

நோட்டுக்கும் உள்ள வேறுபாடு அதற்குத் தெரியாது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரிந்து நூறு ரூபாய் நோட்டின் மதிப்பை உணரச் செய்த பிறகு கொடுத்தால் அது அதனை மிகவும் அக்கறையோடு பாதுகாக்கும். அவ்வாறு, அமைதியற்ற மனத்தோடு இருக்கும்போது இறைவன் திருத்தாளைக் கொடுத்தால் அதனால் பயன் வராது. அந்தத் தாளின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விடுவோம். ஆகவே, முதலில் மனத்தில் அமைதியைத் தந்து அப்புறம் இறைவன் திருத்தாளைத் தரவேண்டும். அமைதி உண்டாகக் கூடிய இடந்தான் இராப்பகல் அற்ற இடம். அதனைத் தந்து, பின்பு அமைதியாக இருந்து துதிக்கச் செய்து, அப்புறம் தண்டையந்தாள் தரவேண்டுமென்று முறைப்படுத்தி விண்ணப்பம் செய்கிறார்.

"என் மனம் நடுநிலையை அடைந்திருக்கும் இராப்பகல் அற்ற இடத்தை நீ காட்ட வேண்டும். இடம் காட்டினால் மட்டும் போதாது. அந்த இடத்தில் செய்வதற்குரிய செயல் வேண்டும். அந்தச் செயலுக்குப் பற்றுக் கோடாக உன் திருவடியையும் நீ தந்து அருளவேண்டும்" என்கிறார்.

இவ்வாறு சகல கேவல நிலையின்றி அமைதியான பாங்கில் ஆண்டவனைத் தியானித்து அவன் திருவடியைப் பற்றிக் கொள்ளுதல் பேரின்பத்திற்கு வாயில். இதனைப் பெற வேண்டுமென்று பிரார்த்தித்த அருணகிரியார் அடுத்தபடியாக முருகப்பெருமானைப் புகழ்கிறார்.

2

திருமால் முருகனைப் புகழ்தல்

கரி கூப்பிட்ட நாள்

கராப்படக் கொன்று அக் கரி போற்ற நின்ற