பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

உள்ளம் குளிர்ந்தது

வெளியில் ஒளி சூழ்ந்திருக்கும்போது கூட உள்முகத்தில் ஏற்படும் மாறுதல்களினால் கண் மறைந்து வெளியில் இருள் கப்பிக் கொண்டிருப்பது போலத் தோற்றும். இப்படியே, வெளியில் இருள் கப்பிக்கொண்டிருக்கும் போது சிலருக்குக் கருத்தில் உள்ள ஒளியினால் புறத்தில் எல்லாம் ஒளிமயமாகத் தோற்றுவதும் உண்டு.

உருவெளித் தோற்றம்

ஏதாவது ஒரு பொருளிடத்தில் நமக்கு மிக்க ஆசை உண்டானால் அந்தப் பொருள் நம் மனத்தில் தோற்றும். அந்த ஆசை முறுகினால் மனத்திலே தோற்றுவதோடு நில்லாமல் புற வெளியிலும் தோற்றும். அப்படித் தோற்றும் தோற்றத்தை உருவெளித் தோற்றம் என்று புலவர்கள் சொல்வார்கள். அகத்தில் உள்ள காதல் மிகுதியாக ஆக அகத்தில் தோற்றும் தோற்றமே புறத்திலும் வந்து தோற்றுமாம்.

நாம் கூடச் சில சமயங்களில் சிலவகையான காட்சிகளைக் காணுகிறோம். சுவரில் ஏதாவது ஒரு மூளி இருந்தால் அந்த இடம் ஒட்டகமாகத் தோன்றும்; பெண் மாதிரித் தோன்றும். மற்றவர்களுக்கு அது தோன்றாது. ஓரிடத்தில் அழுக்குப் படிந்திருக்கும்; வட்டமாக இருக்கும். அதில் கண்,காது,மூக்கு எல்லாம் நன்றாகத் தோன்றும்; ஒரு சித்திரம் போலவே தோற்றமளிக்கும். எல்லோருக்கும் அது தோன்றாது. நம்முடைய மனோபாவமே அப்படிக் காண்பதற்குரிய காரணம்.

காதல் மிகுந்தவர்களுக்கு உருவெளித் தோற்றம் தோன்றும் என்பதைப் பழைய இலக்கியங்கள் சொல்கின்றன. இணை பிரியாமல் வாழ்ந்த காதலனும், காதலியும் ஒருவரையொருவர் உருவெளியில் பார்க்கிறார்கள். காதலன் பொருளைத் தேடிக் கொண்டு போகிறான். அந்தக்