பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உள்ளம் குளிர்ந்தது

முடி வரைக்கும் தொடர்புடையது அது. அது மிகவும் எளிதில் நினைப்பதற்குரியது. முதலில் நினைவுக்கு வருவது அதுதான். முதலில் அது தோன்றுகிறது என்று அருணகிரியார் பாடுகிறார்.

செங்கேழ் அடுத்த சின வடிவேலும்.

செங்கேழ் - செய்ய நிறம். அதனைக் கொண்ட சினம் பொருந்திய வேல் அது. முருகனுக்கு உள்ளதை வேலின் மேல் ஏற்றிச் சொன்னபடி. உலகத்தினருக்குத் துன்பத்தைத் தரும் அசுர சக்தியிடம் உள்ள கோபம் அது.

அப்படியின்றிச் சின்னமான வடிவேல் என்றும் பொருள் கொள்ளலாம். முருகப் பெருமானுக்குரிய சின்னமாக அமைகின்ற வேல் என்பது அதற்குப் பொருள். முருகப் பெருமானுக்குப் பிரதிநிதியாக எழுந்தருளுகிற சின்னம் வேல். வேலில் முருகனை ஆவாகனம் பண்ணிப் பூசை பண்ணுவது பழங்கால முதல் உள்ள வழக்கம். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனுடைய திருக்கோயிலை வேற்கோட்டம் என்று குறிப்பிடுகிறார். வேலையே முருகனாக வைத்துக் கும்பிடும் வழக்கத்தை அது காட்டுகிறது. இன்றும் யாழ்ப்பாணத்தில் சில கோயில்களில் வேலை நட்டு முருகனாக வழிபட்டு வருகிறார்கள்.

இப்படி எம்பெருமானுக்குச் சின்னமாக இருக்கும் ஞானசொரூபமாகிய வேலை, சிவந்த நிறத்தையுடைய வேலை, எளிதில் தியானப் பொருளாக நினைத்தால் அது உள்ளத்தில் வந்து தோன்றும். அந்த வேலைப் பற்றிக் கொண்டால் முருகனுடைய திருக்கோலம் தொடர்ந்து காட்சியளிக்கும். இவற்றை எல்லாம் நன்கு உணர்த்துவார்போன்று, புறத்தில் தோன்றும் காட்சியில் முதலில் தோற்றுவது வேல் என்று சொல்கிறார்.

செங்கேழ் அடுத்த சினவடி வேலும்.