பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணாரக் காணும் காட்சி

61

நிலைகளை இங்கே பார்க்கிறோம். நாள்தோறும் ஆண்டவன் திருக்கோயிலுக்குச் சென்று ஒரு பயிற்சியும் இல்லாமல் கும்பிட்டு வருவதில் பயன் இல்லை. அந்தக் கோயிலையே உள்ளத்தில் கொண்டுவந்துவிட வேண்டும். நம் உள்ளத்தில் கர்ப்பக்கிருகத்தைச் சிருஷ்டி பண்ண வேண்டும். உள்ளம் எம்பெருமானுடைய தரிசனத்தில் ஈடுபடவேண்டும். இப்படிப் பலகாலம் பயின்று, எப்போது நினைத்தாலும் தெளிவாக அந்தத் திருவுருவத்தைக் காணும் நிலை வந்து விட்டால், அதற்கப்பால் புறத்தில் காணும் நிலையும் உண்டாகும். இந்த அநுபவத்தை அருணகிரியாரும், அபிராமி பட்டரும் சொல்கிறார்கள்.

செங்கேழ் அடுத்த சினவடி
வேலும் திருமுகமும்
பங்கே நிரைத்தநல் பன்னிரு
தோளும் பதுமமலர்
கொங்கே தரளம் சொரியும்செங்
கோடைக் குமரன்என
எங்கே நினைப்பினும் அங்கேஎன்
முன்வந்து எதிர் நிற்பனே.

[செம்மையான நிறத்தைக் கொண்ட சினமுள்ள கூர்மையான முருகனது வேலும், அவனுடைய திருமுகங்களும், பக்கத்தில் வரிசையாக உள்ள நல்ல பன்னிரண்டு திருத்தோள்களுமாக, தாமரை மலரானது மணத்தையும் முத்தையும் சொரிகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் குமரன் என்று எங்கே நினைத்தாலும் அங்கே அடியேனுடைய முன்னாலே வந்து எதிரே காட்சி தந்து நிற்பான்.

கேழ் - நிறம். அசுரரின் இரத்தம் தோய்தலால் செந்நிறம் பெற்றது. மாணிக்கம் பதித்த வேலாதலின் செந்நிறமுடையதாயிற்று