பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயபக்தி

65

துன்பத்தை உலகிலுள்ள யாராலும் நீக்க முடியாது. தொல்காப்பியம்,

"மாற்றரும் கூற்றம்"

என்று யமனைச் சொல்கிறது. எதனாலும் மாற்ற முடியாத யமன் என்பது பொருள். இன்ன காலத்தில் இன்னவனுடைய உயிரை அவன் உடம்பினின்றும் பிரிக்க வேண்டுமென்ற வரையறையைச் செய்துகொண்டு அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதனால் கூற்றுவனுக்குக் காலன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்தக் காலத்திற்கு அணுவளவு முன்போ, பின்போ இல்லாமல் உயிரைப் பிரித்துக்கொண்டு போகிறவன் அவன். அவனால் உண்டாகும் பயத்தை உலகத்திலுள்ள யாராலும் தீர்க்க முடியாது. காலனுக்குக் காலனாக இருக்கும் ஒருவன்தாள் போக்க முடியும். ஆகையால் காலனிடத்தில் பயமும், அதுகாரணமாகக் காலகாலனிடத்தில் பக்தியும் உண்டாக வேண்டும். அப்படி உண்டான பக்திதான் பயபக்தி என்று சொல்லப் பெறுவது. அருணகிரியார் வேளைக் காரன் வகுப்பில்,

"ஆனபய பக்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பக்தசன வாரக்காரனும்"

என்று பக்தர்களைப் பற்றிச் சொல்லும்போது பயபக்தி என்ற தொடரை ஆள்கிறார்.

'மரணம் வந்துவிடுமே' என்று பயந்து பக்தி செய்யும் நிலை மிகச் சிறந்தது. அப்போதுதான் அந்தப் பக்தி ஆழ்ந்து முறுகியதாக இருக்கும். நாம் இறைவனிடத்தில் ஓரளவு பக்தி பண்ணுகிறோம். ஆனால் பயபக்தி செய்வதில்லை. மரணத்தில் நாம் உண்மையான பயத்தைக் கொள்ளவில்லை.

5