பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

உள்ளம் குளிர்ந்தது



அறிவும் உணர்வும்

ரணம் துன்பமுடையது என்பதை நாம் அறிவோம். ஆனால் எவ்வாறு உணரவேண்டுமோ அப்படி உணருவது இல்லை. அமெரிக்க நாட்டில் நூறு வீடுகள் எரிந்து விட்டன என்று பத்திரிகையில் பார்க்கிறோம். அந்தச் செய்தி ஒரு கண நேரம் இரக்கத்தை உண்டாக்கினாலும் பின்பு வெறும் செய்தி அளவாக முடிகிறது. ஆனால் அடுத்த வீட்டில் தீப் பிடித்துக்கொண்டுவிட்டது என்று ஒருவன் சொன்னால் நாம் அதைச் செய்தியாகக் கேட்டு நின்றுவிடுவதில்லை. உடனே பரபரப்பு அடைந்து, 'நம் வீட்டுக்கும் அது வந்துவிடுமே!' என்று அஞ்சி நெருப்பை அணைப்ப தற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்ய ஒடுவோம். அது தான் உண்மையான பயம். மரணத்தைப் பற்றிய செய்தி நமக்குத் தெரியும். ஆனால் அது நம்முடைய குலையில் ஊடுருவி அச்சத்தை உண்டாக்கவில்லை.

ஒரு மனிதன் ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குப் பார வண்டியை ஏற்றிச் செல்கிறான். அதனால் வரும் கூலியினால் பிழைத்துக் கொண்டிருக்கிறான். அவன் வாரத்திற்கு ஒரு முறை தன்னுடைய மாடுகளைக் குளிப்பாட்டச் செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் மாடுகளை ஓட்டிக் கொண்டு தண்ணீர்த் துறைக்குப் போய்க் கொண்டிருக்கிறான். அப்போது பல ஆண்டுகளாகப் பாராமல் இருந்த மைத்துனன் அக்கரைச் சீமையிலிருந்து வருகிறான். அவனைக் கண்டவுடன் காளை மாட்டுக்காரனுக்கு எல்லையில்லாக் களிப்பு உண்டாகிறது. பாதி வழியிலேயே மாடுகளைத் திருப்பிக்கொண்டு வீட்டுக்குப் போய்க் கொட்டிலிலே கட்டிவிட்டு அவனோடு பேசப் போகிறான். அடுத்த வாரம் குளிப்பாட்டிக் கொள்ளலாமென்று நின்று விடுகிறான்.