பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயபக்தி

67

மற்றொருவன் நாள்தோறும் நீராடும் பழக்கம் உடையவன். மூன்றாவது வகுப்பில் டெல்லிக்குப் பயணம் செய்கிறான். போகிற வழியில் நல்ல வசதி இல்லாமையினால் நீராட முடிகிறது இல்லை. ஏதோ கிடைத்ததைப் பசிக்கு உண்டு, இரண்டு மூன்று நாளைக் கழித்து டெல்லி போய் இறங்கின பிறகு நீராடுகிறான். இன்னும் ஒருவன் நாவல் படித்துக்கொண்டிருக்கிறான். அது துப்பறியும் நாவல். கதையிலே இன்னும் துப்புத் துலங்கவில்லை. துப்புத் துலங்கும் கட்டம் உள்ள அத்தியாயம் வருகிறது. அப்போது தாகமாக இருக்கிறது. தண்ணீர் குடிப்பதற்காக அருகில் உள்ள பையனைப் பார்த்து, "நீர் கொண்டு வா' என்று சொல்கிறான். அவன் கொண்டுவந்து நிற்கும் போது இவன் அந்த அத்தியாயத்தை முடித்துவிடலாமென்று தலையைக் குனிந்தபடியே படித்துக் கொண்டிருக் கிறான். படித்து முடித்த பிறகே தலையை நிமிர்ந்து பார்த்துத் தண்ணீரை வாங்கிப் பருகுகிறான். இன்னும் ஒருவன் சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவப் போகிறான். இடையில் ஒரு தந்தி வருகிறது. அவனுக்கு மிக வேண்டிய நண்பன் ஒருவன் இறந்துவிட்டதாக அந்தத் தந்தி சொல்கிறது. அதைக் கண்டு கண்ணீர் விட்டுக் கொண்டு கையில் நீர்விட்டுக் கழுவாமல் அரைமணி நேரம் நிற்கிறான்.

இப்படி உள்ள அத்தனை பேர்களுக்கும் தண்ணீர் அவசியம். ஆனால் காளைமாட்டுக்காரனுக்கு ஒரு வாரம் தண்ணீர் காத்திருக்கலாம். டெல்லி செல்கிறவனுக்கு மூன்று நாள் காத்திருக்கலாம். கை கழுவுகிறவனுக்கு ஒரு மணி நேரம் காத்திருக்கிறது. நீர் வேட்கை இருக்கிற வனுக்குக் கால் மணி நேரம் காத்திருக்கிறது.

வேறு ஒருவனுக்குத் தலையில் நெருப்புப் பிடித்துக் கொள்கிறது. "ஐயோ தண்ணீர், தண்ணீர்!" என்று ஓடுகிறான்.