பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

உள்ளம் குளிர்ந்தது

போடுகிறோம்; ஒரு வீட்டுக்கு இரண்டு பூட்டுகள் போட்டுப் பாதுகாக்கிறோம். இவை போதாவென்று கருதி வீட்டில் நாயையும், காவல்காரனையும் வைக்கிறோம். இவையும் போதா என்று கருதி ஊரில் போலீஸ்காரனை வைத்திருக்கிறோம். இவ்வளவும் நாம் சேமித்த பொருளுக்கு மோசம் வரக் கூடாது என்பதற்காகச் செய்யும் காரியங்கள். நாம் பெற்ற பொருள்களுக்குள்ளேயே மிகச் சிறந்தது உயிர். நம்மை நாமே இழந்துவிடக் கூடாது. இந்த உயிரினால் வருகின்ற நன்மைகளை எல்லாம் பெறாமல் உடம்பை விட்டுப் பிரிந்து போனால் உடம்பை எடுத்ததன் உண்மையான பயன் உண்டாகாது. மரணம் அடையும்போது, செய்யவேண்டிய காரியங்களைச் செய்து விட்டோம் என்ற மன நிறைவு இருந்தால், துன்பம் வராது. ஆகவே உடம்பு இருக்கும்போதே மரண பயத்தைப் போக்குவதற்குரிய நெறியில் ஒழுக வேண்டும்.

ஆவிக்கு மோசம் வருமென்ற உணர்ச்சி வேண்டும். அதற்குப் பெரிய சாத்திரங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகத்தில் பிறந்த யாவருக்கும் இந்த உடம்பில் உயிர் நில்லாது என்ற உண்மை நன்றாகத் தெரியும். கடவுள் இல்லையென்று சொல்லுவார் இருக் கிறார்கள். சொர்க்க நரகங்கள் இல்லையென்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். மோட்சம் இல்லையென்று சாதிப்பவர்கள் இருக்கலாம். புண்ணிய பாவம் தர்மம் முதலாயின என்று இல்லையென்று சொல்கிறவர்களும் இருக்கலாம். ஆனால் உடலிலிருந்து உயிர் போகாது என்று சொல்கிறவர் யாரும் இல்லை. இது யாவரும் அறிந்த உண்மை. உயிர்போகும்போது நாம் தத்தளித்து மிகவும் வருந்துவோம். அத்தகைய வருத்தம் வரக்கூடாது என்று கருதி அதற்கு முன்பே இறைவன் திருவருளைப் பெறவேண்டுமென்ற உறுதியோடு பக்தி செய்ய