பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

உள்ளம் குளிர்ந்தது

சொல்கின்றன. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாக நிற்கின்றன என்று தோன்றுகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் இன்னது செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறோம்.

பல இரட்டைகள்

ப்படியல்லாமல் வேறு இரட்டைகளும் மோதுவதுண்டு. இரண்டு பேரை ஆசிரியராகக் கொண்டாலும், இரண்டு பேரை மனைவிகளாகக் கொண்டாலும், இரண்டு கடையில் கணக்கு வைத்துக் கொண்டாலும், இரண்டு பேரைத் துணையாகக் கொள்ள நேர்ந்தாலும், இரண்டு வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவதாகச் சொன்னாலும், இரண்டுபேரின் உரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் எதை மேற்கொள்வது என்ற திண்டாட்டம் வரும். இவைகளும் ஒருவகையில் இருதலைக் கொள்ளியினிடையே உள்ள எறும்பு போன்ற நிலையை உண்டாக்குகின்றன. இப்படிப் பார்த்தால் எறும்பின் நிலை பல பலவாக வருகின்றதைப் பார்க்கலாம். வாழ்வு முழுவதும் சில இரட்டைகளுக்கு நடுவில் நின்று திண்டாடுகிறோம். சில நாட்களில் வேறு சில இரட்டைகளின் நடுவில் திண்டாடுகிறோம்.எப்படியோ கமக்கு இந்தத் திண்டாட்டம் விடுவதே இல்லை.இது போக வேண்டுமானால் நம் மனம் திண்மையுடன் இருக்கவேண்டும்.

இறைவனுடைய திருவடிப் பற்று ஒன்றுதான் அந்தத் திண்மையை உண்டாக்கும். எந்த வேலையைச் செய்தாலும் திருடனுக்குத் திருட்டிலே கண் இருப்பது போலவும், யாரிடம் காதல் செய்தாலும் பரத்தையர்களுக்கு வருமானத்தில் ஆசை இருப்பது போலவும், எத்தனைதான் பேசிக் கொண்டு வந்தாலும் கார் ஓட்டுகிறவனுக்குக் கைச் சக்கரத்தில் நோக்கம் இருப்பது போலவும், உலகில் எப்படி வளைய வந்தாலும் எத்தனை பேர்களிடம் பழகினாலும்