பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

53

புத்தகப் படிப்பு ஒன்றே கொடுக்க மனங்கொண்டாரல்லர். மாணவரெல்லாரும் எப்படிக் குளிப்பதென்றும், எப்படிப் பல்லையும் உடையையும் சுத்தப்படுத்துவ தென்றும், எதை எப்படிச் சாப்பிடுவதென்றும், எப்படி அறைகளைத் தூயனவாக வைத்திருப்பதென்றுங் கற்பிக்கப்பட்டார்கள் : ஏதேனும் ஒரு கைத்தொழிலும்கற்பிக்கப்பட்டார்கள் : உழைப்புணர்ச்சியும் செட்டுணர்ச்சியும் கொளுத்தப்பட்டார்கள் : பள்ளியைவிட்டுச் சென்றதும் வாழ்க்கைக்கு வேண்டிய வழியைத் தேடிக்கொள்ளக் கற்பிக்கப்பட்டார்கள். இவற்றிலெல்லாம் புக்கருக்கு எதிர்பாராத அருமை உதவியாளர் ஒருவர் அமைந்தார். ஒலிவியா டேவிட்சன் (Miss Olivia Davidson) என்னும் அப்பெண்மணி தக்க குணங்கள் எல்லாம் வாய்க்கப் பெற்றவர். அவர் ஒகியோப் பட்டணத்தே பிறந்து கல்வி பயின்ற பின்னரும், ஹேம்புடன் பெருமையைச் செவியுற்று ஆங்குஞ் சென்று பட்டம் பெற்றவர் ; அதற்கு முன்னரே ஆசிரியத்தொழிலைச் செவ்வனே செய்தவர். தம் மாணவர் அம்மை நோய், தொத்துக்காய்ச்சல் முதலியவற்றால் துன்புற்ற காலையிற் சலிப்பின்றி உடனிருந்து பேணி, வேண்டிய செய்த பெருந்தகையார் அவர். அன்னார் இப்பொழுது டஸ்கிகிப் பள்ளிக்கூடத்தில் ஒர் ஆசிரியராய் வந்து சேர்ந்து புக்கருக்குப் பேருதவி செய்வாரானார்.