பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவுரை


பண்டிதமணியின் வாழ்க்கை வரலாறு வித்துவான் விசு.திருநாவுக்கரசு. உலகஞ்சுற்றிய தமிழர் சோமலெ. புலவர் சோமசுந்தரனார் முதலிய பெருமக்களால் சுவையாக உரைநடையில் எழுதப்பட்டுள்ளது.இவ்வரலாறு தனிக்கட்டுரைகளாகவும் பலரால் வரையப்பட்டுள. ஒரு காப்பியத்துக்கு வேண்டிய கூறுகள் இவ்வாழ்க்கை வரலாற்றில் மிளிர்ந்து கிடப்பதை எளிதில் உணரலாம். செய்யுட் சோலைகளில் திளைத்துக் குளிர்ந்து இலக்கிய நயங்கண்ட பண்டிதமணியார் வரலாறு செய்யுளுருப் பெறுவதே சிறப்பாம் என எனக்குத் தோன்றியது. புலவனைப் பொருளாகக் கொண்ட தமிழ்க்காப்பியம் இதுவரை தோன்றியதில்லை. பண்டிதமணி வரலாறு காப்பியமாகுமேல், பல தமிழுணர்ச்சிக்கும் புதிய தமிழ் வளர்ச்சிக்கும் உரங்கிடைக்கும் என்றும் எண்ணினேன்.

கவியரசுப் புகழ் பெற்ற முடியரசன் என் மனக்கண் முன்னே தோன்றினார். பண்டிதமணி தோற்றி வளர்த்த சபையிற் புலமை பெற்ற மாணவர் காப்பிய நாயகனை நேரிற் கண்டும் கேட்டும் தொழுதவர். தமிழின் புறந்தொழாத் தன்மானக் கவிஞர்: காப்பியம் பாடிப் பழுத்த முதுபுலவர். அத்தகு கவியரசை வேண்டினேன். தமிழன்னைக்கு ஊன்றுகோல் வடித்துத் தந்தார். 'இழுக்கலுடையுழி ஊற்றுக்கோல்' என்ற பொய்யா மொழிக்கேற்ப, இன்று தமிழ்படும் பாட்டில் வல்லிய ஊன்றுகோல் ஒருவந்தம் வேண்டும். நாடெங்கும்சென்று தமிழ் நயம் பரப்பிய பண்டிதமணியை எழுபதாண்டுகள் தாங்கிய ஊன்றுகோல் என்றால், அதன் நேர்மையும் திண்மையும் ஒண்மையும் சொல்லுந்தரமோ? ஆம் உரைநடையிற் சொல்லுந்தரமில்லை. கவி நடையில் வெல்லுந் தரமுண்டு என்று காப்பியம் பாடுகின்றார் கவியரசு. சில்லறையாகக் கவிபாடும் இன்றைய இளங்கவிஞர்கட்கு இவ்வாழ்க்கைக் காப்பியம் புதிய கவிமுனை காட்டும் என்று நம்புகின்றேன்.

['கவியரசின் நண்பர் அறிஞர் தமிலன்னல் காப்பியத்தின் - பல்வேறு புதுமைகளை எடுத்துக்காட்டி, இது காலத்திற் அகற்ற காவியம் எனப் பெருமைபட முடிக்கிறார் ஊன்றுகோல் இப்பெறல்குங் காப்பியம் பண்டிதமணி, முடியரசன் புகழுக்குச் சான்றாகும்.]

வ.சுப. மாணிக்கம்,

கதிரகம், காரைக்குடி

17.7.1983,