பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

'இழுக்கலுடையுழி ஊற்றுக்கோல்’ என்ற பொய்யா மொழிக்கேற்ப, இன்று தமிழ்படும் பாட்டில் வல்லிய ஊன்றுகோல் ஒருவந்தம் வேண்டும். நாடெங்கும்சென்று தமிழ் நயம் பரப்பிய பண்டிதமணியை எழுபதாண்டுகள் தாங்கிய ஊன்றுகோல் என்றால், அதன் நேர்மையும் திண்மையும் ஒண்மையும் சொல்லுந்தரமோ? ஆம் உரைநடையிற் சொல்லுந்தரமில்லை, கவி நடையில் வெல்லுந் தரமுண்டு என்று காப்பியம் பாடுகின்றார் கவியரசு. சில்லறையாகக் கவிபாடும் இன்றைய இளங்கவிஞர்கட்கு இவ்வாழ்க்கைக் காப்பியம் புதிய கவிமுனை காட்டும் என்று நம்புகின்றேன்.

கவியரசின் நண்பர் அறிஞர் தமிழண்ணல் காப்பியத்தின் பல்வேறு புதுமைகளை எடுத்துக்காட்டி, இது காலத்திற்கேற்ற காப்பியம் எனப் பெருமைப்பட முடிக்கின்றார். பாவலர்மணி பழநியார் கவிஞரைப் பற்றிய வாழ்க்கையைக் குறிப்பாகத் தந்து, அவர் தம் புரட்சிப் பாங்கினைப் புலப்படுத்துகின்றார். இப்பேரன்பர்கட்கு என் நன்றி.

ஊன்றுகோல் என்னும் இப்பெறலருங் காப்பியம் பதிப்பாவதற்கு முழுக் கொடை வழங்கியவர் மேலைச் சிவபுரி திரு. அ. சுப. அண்ணாமலை, வணிக இளங்கலை அவர்கள். என் வேண்டுகோளை இமைப்பொழுதில் ஏற்றுக் கொண்ட கொடைப் பெருமை உடையவர். இளஞ் சடையப்பர் என்ற பாராட்டுக்கு உரியவர். பண்டித மணி, முடியரசன்,.. அண்ணாமலை என்ற மூவர் புகழுக்கும் சான்றாகும் காப்பியம் ஊன்றுகோலாகும். தமிழ்க்கொடையருளிய அண்ணாமலைக்குச் சபையின் நன்றி பெரிது.

பண்டிதமணி நூற்றாண்டுக் குழுவின் வெளியீடுகளைக் காலமும் தற்பயனும் பாராது பொறுப்பெடுத்து அச்சுப்பார்த்து வனப்பாக்கித்தரும் ஆர்வலர் அறிஞர் கதிர் மகாதேவனுக்கும், காப்பியத்தைச் செம்மை வடிவிற் பதிப்பித்த திண்டுக்கல் இந்திரா அச்சகத்தார்க்கும் நன்றியுடையோம்.