பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஊருக்குள் ஒரு புரட்சி யோசிக்கிய பதில் சொல்லிட்டு காரியத்த கவனிங்க. ஆண்டியப்பனுக்கு அநியாயம் பண்ணுன எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்." ஊர்ப்பிரமுகர்கள், அதிர்ந்துவிட்டார்கள். கலைக்கப்பட்ட பஞ்சாயத் தின் முன்னாள் தலைவரான பரமசிவம், விழித்துக் கொண்டார். விரைவில் நடக்கப் போகும் விசாரணையில் இவரு கோளாறு பண்ணிட் டால், ஏற்கெனவே பஞ்சாயத்துத் தலைவர் என்பதை ப. (பழைய) தலைவர்னு சின்னான் பய சொல்லிக் கொடுத்து எல்லாப் பயலும் சொல்றாங்க. இதை, இதுக்கு மேல் விடப்படாது. பரமசிவம் எழுந்து நின்று பேசினார்: "அண்ணாச்சி, நீ பேசுதது ஒனக்கே நல்லா இருக்கா? காய்ச்ச மரத்துலதான் கல்லெறி விழும். ஒன்ன நாங்க விட்டுக் கொடுப்போமா? இவங்க எங்க போயிடப் போறாங்க... நாம எங்க போயிடப் போறோம்?" கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கோபம் ரெட்டிப்பானாலும், உலக மொறைக்காக அந்த இடத்தில் அடக்கிக் கொண்டார். தாம்பாளத் தட்டுகளுடன் இருந்த மாப்பிள்ளைகளின் தந்தை மார்களிடம் "பன்னிரெண்டாயிரம் ரூபா இருக்கு, நல்லா எண்ணிக்கங்க" என்று ப. தலைவர் பரமசிவம் சொன்னபோது, அவர் அப்படிச் சொல்லும் முன்னாலேயே பணத்தை எண்ணிய மாசானமும், குமாரின் தந்தையும் லேசாகச் சிரித்தார்கள். குமாரும், மாசானத்தின் மைந்தனும், உள்ளே வீட்டுக்கதவில் ஒருவர்மேல் ஒருவராகச் சாய்ந்து கொண்டு மெய்மறக்க நின்ற வருங்கால மனைவிகளைப் பார்த்தார்கள். கூட்டுறவுச் சங்கத் தலைவர் மட்டும், பன்னிரண்டாயிரம் என்றதும், 'ரிக்கார்ட்படி தலா மூவாயிரம் மதிப்புள்ள செத்துப்போன நான்கு பசுமாடுகளை நினைத்துக் கொண்டார். பன்னிரெண்டாயிரத்துல... ஒன்பதாயிரம் நம்ம தலையில விழுந்திடுமோ... மாடுவ... செத்ததே செத்தது... இன்சூரன்ஸ் ஆனபிறவு செத்திருக்கப் படாதா... இல்லன்னா... இந்தப் பயலுவ மாட்ட வாங்கு முன்னால செத்திருக்கப்படாதா... எப்படியோ, நிச்சயதாம்பூலம் நிறைவு பெற்றதன் அறிகுறியாக, வாழை இலைகள் விரிக்கப்பட்டு, கேசரி வைக்கப்பட்டு, பொங்கல் போடப்பட்டு, இவை எல்லாம் தின்னப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தரைப்பாயில் கிடந்த மீனாட்சி, கண்ணில் பெருகிய நீரை, கைகளைத் துக்கமுடியாமல் தூக்கித் துடைத்துக் கொண்டாள். அவள் மார்பிலுள்ள புண்ணில், நீர் கட்டி, ஏர் குடையும் நிலம்போல, அவள் மார்பகத்தைக் குடைந்து எடுத்தன. பிரசவ வலியைவிட பெருவலி. அழுகையை அடக்க முடியாத அரக்க வலி, ஒருவேளை டாக்டரிடம் போனால் தீரலாம். டாக்டர் டவுனில் இருக்கிறார். நேரமோ இரவு. அண்ணனிடமோ காசில்லை, மாணிக்கம் அடித்த பல்டியில் அவன் சோர்ந்து போய் கிடக்கிறான். அவனிடம் எப்படிச் சொல்வது? சொல்லாமல், இந்த வலியை எப்படித் தாங்கிக் கொள்வது?