பக்கம்:எக்கோவின் காதல்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

"ஒருநாள் மாலை, வைரத்தோடு செய்துகொண்டு என் அப்பாவிடம் காட்ட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பா வயலுக்குப் போயிருந்தார்.

“நான்தான் அதைப் பார்த்துக் கொண்டே அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.\

“நேரம் ஆகிவிட்டது. நாளை வருகிறேன்” என்றார்.

“இல்லையில்லை; இருங்கள். இப்பொழுது அப்பா வந்துவிடுவார்; அவரிடம் காட்டிவிட்டு அப்புறம் போகலாம்”, என்றேன்.

அவருக்கும் போக மனமில்லை. அப்பாவோ நெடுநேரம் ஆகியும் வரவே இல்லை . இருட்டிவிட்டது. இருள் எங்கள் எண்ணத்திற்கு உதவி செய்தது. நாங்கள் வீட்டை மறந்து விட்டோம் - ஏன் உலகத்தையே மறந்து விட்டோம். அந்த நிலையில் அப்பா மட்டும் எங்கே நினைவிற்கு வரப்போகிறார்?

“சீதா!சீதா! என்று அழைத்துக் கொண்டே என் அப்பா வந்துவிட்டார். அப்பொழுதுதான் எங்கள் நிலைமை நினைவிற்கு வந்தது. வெடவெடத்து விட்டது எனக்கும் அவருக்கும். அப்பா கண்டுவிட்டார். அவர் தான் முன் கோபக்காராயிற்றே, விழி பிதுங்கிவிடும் போல் பார்த்தார். எனக்கு ஒரே பயம். ஆனால் வெளியே தெரிந்தால் கேவலமாகுமே என்று சத்தம் போடாமல் பார்வையளவிலேயே நின்று விட்டார்.

மறுநாள் மாலை கறுப்பண்ணன் என்பவனோடு தனியாகப் பேசிக்கொண்டிருந்தார் என் அப்பா. நான் அதைக் கவனித்து விட்டேன்.