பக்கம்:எக்கோவின் காதல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

51

உலகநாதனுக்கு உல்லாசப் பொருளாகப் போகிறாய்! அன்று பெருச்சாளியைப் பேய் என்று எண்ணினேன். ஆனால் அது தவறு. பெண்ணுருக்கொண்ட பேய் நீதான். என் வாழ்வு முழுதும் ஆட்டி வைக்கும் பேயாகிவிட்டாய்” என்றெல்லாம் திட்டினேன். திட்டி என்ன செய்வது; அவள் தகப்பன் பணஆசை பிடித்தவன். அதனால் அப்படிச் செய்து விட்டான். அதற்கு அவள் என்ன செய்வாள். அவன் அப்படியிருந்தாலும் அவள் ஏன் உடன்பட வேண்டும்? இப்படியெல்லாம் உழன்றது என் மனம்.

திருமண நாள் நெருங்கிவிட்டது. நாளை எண்ணிப் பார்த்தேன். நாளைக் காலைதான் திருமணம். அவள் மணக்கோலம் என் கண்முன் தெரிந்தது. நானும் அவள் அருகில் இருந்தேன். மறுபடி அவளருகில் உலகநாதன். மேள ஒலி வீட்டையே அதிரச் செய்தது. அவள் அவனைக் கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவன் முறுவல் பூத்த முகத்தை அவள் பக்கமாகத் திருப்புகிறான்.

'அய்யா! தபால்’

திடுக்கிட்டு எழுந்தேன். கற்பனை கலைந்தது. தபாலை வாங்கிப் பார்த்தேன்.

'ஊர்மிளா நேற்று இரவு சிவலோகப் பிராப்தி அடைந்து விட்டாள்'.

எனக்குப் பதற்றமோ பரிதாபமோ ஏற்படவில்லை. ஆனால் என் உள்ளம் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது.

‘என் அத்தை வீட்டில் பேய் இருக்கிறதென்று எண்ணினேன். ஆனால் அது பெருச்சாளியாயிற்று. பெருச்சாளி