62
எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
கண் மூடி வழக்கத்திற்குக் குழி தோண்டிவிட்டோம் மண்கொட்டி மூடிவிட வேண்டியதுதான் பாக்கி.
கண் மூடி வழக்கத்திற்கு நாங்கள் இருவரும் குழி தோண்டினோம். மண் போட்டு மூட வேண்டுமே. அதற்கு அவளுடைய பெற்றோரின் உதவியை நாடினோம். உதவி செய்ய மறுத்துவிட்டனர். உள்ளம் இடங்கொடுத்தாலும் சமூகம் அவர்களைச் 'சரி' என்று சொல்லவிடாமல் தடை செய்கிறது. கடைசியாக எப்படியோ அவர்களை உடன்படச் செய்துவிட்டான் வேலன்.
புனிதத்தின் பெற்றோர்கள் புலன்விசாரனை நடத்தினார்கள். விசாரணைக்குப் பின் எனக்குத் தண்டனை தரப்பட்டது. “புனிதம் உன் சொத்தில்லை ” என்று. ஏன்? என்று எதிர் வழக்காடினேன்.
நீ 'ஏழையாகப் பிறந்தது ஒரு குற்றம். அதை மன்னித்து விட்டாலும் வேறு சாதியில் பிறந்த இரண்டாவது குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது' என்றனர்.
குற்றவாளியானேன்.
'வேலா! இனி என்ன செய்வேன்? 'ஏழை' -'வேறு சாதி இந்தக் குற்றங்களுக்காக என் சொத்துப் பறிமுதல் செய்யப்பட்டது!
'துரை! நீயா இப்படிக் கலங்குவது. அவை உன் குற்றமல்ல. இன்றுள்ள சட்டப்படி அவை குற்றமாகின்றன. அந்தச் சுயநலக் கும்மல் வகுத்த சட்டம். மனிதனை நசுக்குவதற்காக மனிதனாலேயே செய்யப்பட்ட சட்டம். சட்டம் என்றைக்கும் ஒரே மாதியான நிலையில் இருக்காது.