பக்கம்:எங்கே போகிறோம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156 O எங்கே போகிறோம்?

வேண்டும். தற்கொலை செய்து கொள்வதிலும், அல்லது கொலை செய்வதிலும் தைரியம் என்பது இல்லை. வாழ்வதில்தான் தைரியம் இருக்கிறது.

உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி, இவற்றை விருப்பும், வெறுப்பும் இன்றி அனுபவிக்கத் தெரிந்துகொண்டால் மனிதனாகலாம். வாழ்க்கையின் உந்து சக்தி நம்பிக்கை. நோக்கம், கடமை, பரிவு ஆகியன வாழ்க்கைக்கு ஒளியூட்டுவன. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வேலை செய்யவேண்டும்; யாராவது ஒருவரிடமாவது அன்பு காட்டவேண்டும்.

வாழ்க்கையில் வெற்றிகளை நம்பிக்கையுடன் எதிர்பார்க்க வேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக்கொண்டால் அது வாழ்க்கையாகி விடும். ஏன்? இத்தகு வாழ்க்கையே வாழ்வாங்கு வாழ்தல். ஒரே ஒருமுறைதான் பிறக்கின்றோம். என்றாவது ஒருநாள் மூச்சுவிட மறந்துபோவோம்; அல்லது உயிர்ப்பு அடங்கும். இந்த இடைவெளிக் காலத்திற்குள் நாம் வாழ்ந்துவிட வேண்டும். நாம் வாழப் பிறந்தோம். “வாய்த்தது நந்தமக்கோர் ஈதோர் பிறவி மதித்திடுயின்” என்றார் அப்பரடிகள். சாவது எளிது.

பிறவி என்பது என்ன? ஆன்மா என்பது என்ன? நான் யார்? என் உள்ளம் யார்? என்ற ஆராய்ச்சி இல்லாமல், தெளிவான அறிவு இல்லாமல், எப்படி வாழ முடியும்? இந்த “ஆன்மா” விஷயத்தில், தத்துவச் சிந்தனையாளர்களிடையிலும், மதஸ்தாபகர்களிடையிலும் நிலவுவது மாறுபட்ட சிந்தனை போக்குத்தான். ஆன்மா, பிறப்பு, இறப்பு. குறித்து தமிழ் மரபு வழிச் சிந்தனையே அறிவியல் அடிப்படையில் சரியானது என்று துணிய முடிகிறது.

“உள்ளது போகாது. இல்லது வாராது” என்பது ஒரு தர்க்க அடிப்படை. இந்தத் தர்க்க நியாயத்தின்படி