8. வாழும்வழி ஒவ்வொரு நாளாய் ஒவ்வொரு நாளாய் ஓடுது வாழ் நாட்கள்- இதில் எவ்விதம் வாழுவ தென்பதை நானின் றெண்ணி யியம்பிடுவேன். இருந்திடும் நாள் வரை இன்பமோ துன்பமோ எது வரினும் வருக!--ஆனால் பரிந்திடும் நற்குணம் படைத்தவ னாய்ப்பலர் பயன்பட வாழ்ந்திடு வேன். நண்பனும் பகைவனு மென்பதில் லாமலே நன்மைகள் செய்திடுவேன்- நல்ல பண்புடன் மக்களுக் கன்பு படிந்திடம் பாங்குடன் பயிற்றிடுவேன். பசியென ஒருமுறை பகருமுன் பரிவுடன் படைத்திடும் தாயாவேன்- சென்று புசியெனப் புகன்றிடும் தந்தையைப் போன்று நற் புரவல னேயாவேன். அடிமையு மன்று நான் ஆண்டையு மன்றுபின் யாரெவ ராயிடினும் - உள்ள உடமையும் உரிமையும் உழைப்பவர்க் கென்பதை யுணர்ந்தினி யொழுகிடுவேன். நெருப்பெனப் பற்றி யெரித்திடும் வெய்யிலில் நிழலென மாறிடுவேன் -- இமயப் பொருப்பினில் நின்று நடுக்கிடு குளிரெனில் பொதிநெருப் பாயிடுவேன், ஒவ்வொரு நாளாய் ஒவ்வொரு நாளாய் ஓடிடும் வாழ்நாளில்- இனி இவ்வித பாக வாழ்வதி னின்றொரு இயரியுந் தவறேனே!
13
13