உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சில் இரவு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

கன்னான் உருக்கிய வெங்கலத்தைப் போன்று
காயும் நிலவே!
பூமியின் நிழல் உன் மீது படுகிறது. அதைக் களங்கம் என்கிறார்கள். உன் நிழல், என் தலையின் முன் பக்கம் படுகிறது. அதை முகம் என்கிறார்கள்.

உன் வியர்வைத் துளி, புல்லின் நுனியில் படுகிறது. அதைப் பனித் துளி என்கிறார்கள். என் வாயின் எச்சில் வாலிபர்களின் மீது படுகிறது. அதைத் தேன் துளி என்கிறார்கள்.

நீ இந்த மலையின் முடியில் படுக்கிறாய்.
நானோ பொருள்தருவோர் மடியில் படுக்கிறேன்.
நீ பகலில் பதுங்கிக் கொள்கிறாய்.
நானோ, பகலில் ஒதுங்கிக் கொள்கிறேன்.
நீ, கடலில் குளிக்கிறாய்.
நான், காவிரியில் குளிக்கிறேன்.
நீ, பதினைந்து நாட்களில் பருவமடைந்தவள்.
நானோ, பதினைந்து வயதில் பருவமடைந்தவள்.
உலகில் நீ, எல்லோருக்கும் பொதுவுடமை.
நானும் எல்லோருக்கும் பொதுவுடைமை.
நீ எண்ணெயின்றி எரியும் விளக்கு.
நானோ, எண்ணெய் இருக்கும் வரையில் மட்டுமே எரியும் விளக்கு!

கார் காலத்தில், உழவர்கள் நொச்சி இலையைத் தம் தலையில் சூடிக் கொள்வார்களாம், வெப்பத்திற்காக!

நானோ வாலிபர்களையே போர்வையாகப் போர்த்திக் கொள்கிறேன், வெப்பத்திற்காக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/53&oldid=1640337" இலிருந்து மீள்விக்கப்பட்டது