பக்கம்:எண்ணக்குவியல்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

எண்ணக் குவியல்

என்று கூறி விட இயலாது. கூறினால். இதைவிடத் தவறு வேறு எதுவுமிருக்க இயலாது.

ஆகவே, தம்பி! இதுகாறும் கூறியவற்றுள் மக்கட் பிறவியில் அறிவில்லாதவன் என்று எவனும் இல்லையென்பதை ஒருவாறு உணர்ந்திருப்பாய் என்று நம்புகிறேன்.

இனிமேலாவது, பிறன் எவனையும் 'அறிவில்லாதவன்' என்று கருதாதே! கூறாதே! உன்னையும் அறிவில்லாதவன் என்று நினையாதே! பிறர் அவ்வாறு கூறினாலும் நம்பாதே! நீ முயன்றால். உன்னிடம் இயல்பாகவே அமைந்துள்ள அறிவுக்கல்லுக்குப் பலபக்கங்களிலும் பட்டை தீட்டி, பல துறைகளிலும் ஒளிவீசச் செய்ய உன்னால் இயலும்.

இவ்வளவும் படித்துவிட்டு, சாணைக்கூடம் எங்கே இருக்கிறது? சாணை எங்கே இருக்கிறது?? என்று தேடி அலைந்து திரியாதே! உலகமே சாணைக்கூடந்தான்! பள்ளிக்கூடமே படிக்கும் சாணை! கேள்வியே கயிறு! உணர்ச்சியே கைக்கோல்! முயற்சியே உருளை! ஆராய்ச்சியே உழைப்பு! அனுபவமே பட்டை! இத்தனையும் ஆனபிறகு எடு திருக்குறளை! ஏற்று மெருகை! எவரை மறந்தாலும் திருவள்ளுவரை மறந்துவிடாதே! இவ்வுலகிலேயே முற்றறிவு பெற்ற ஒரு நிறைமொழி மனிதர் அவர் ஒருவரேயாவர்! தமது அறிவுக் கல்லுக்கு எல்லாப் பக்கங்களிலும் பட்டை தீட்டிக்கொண்டவர் அவர் ஒருவரே! அவர் தந்த மாணிக்கமே 133 பட்டைகளோடு எல்லாத்துறைகளிலும் சுடர் ஒளி வீசிக்கொண்டிருக்கும் திருக்குறள்.

அறிவு ஒளி எங்கும் வீசட்டும்! அறிவுலகம் நன்கு வாழட்டும்!