பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத் தமிழ்க்கவிதை ❖ 8


கவிதைக்குரிய வடிவ குணம்(formal characteristics) அமைவதை நான் கவனித்து வந்துள்ளேன். இந்தக் கட்டுரைகளிலும் நான் அந்த நேர்த்தியைக் காண்கிறேன். 'புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் தோற்றாலும் பாரதிதாசன் என்றும் மக்கள் மன்றத்தின் பிரதிநிதியாக இருக்கத் தவறியதில்லை' என்ற வரிகளில் உள்ள முரண்தொடை அழகையும் 'நிலவைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள கவிதைகள் நட்சத்திரங்களைப்போல் எண்ணற்றவை' என்று எழுதும்போது இயைபு அழகுமிக்க கிண்டல் தொனியையும் 'கவிதையின் கட்டழகைச் சரியாகக் காட்டுவதில் முரண் தொடைக்கு முக்கியப் பங்கு உண்டு' என்ற வரிகளில் உள்ள குறும்பையும் நாம் ரசிக்காமல் இருக்க முடியமா?

கண்ணதாசனின் கவிதையைவிட கண்ணதாசனின் உரைநடையைக் கவிஞர் மீரா விரும்புகின்றார். நான் அப்படிச் சொல்ல மாட்டேன். கவிஞர் மீராவின் கவிதை நேர்த்தியை எவ்வளவு விரும்புகிறேனோ அவ்வளவு தூரம் கவிஞர் மீராவின் உரைநடை அழகை ரசிக்கிறேன் என்றுதான் சொல்வேன்.

 

புதுக்கோட்டைபாலா