பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா ❖ 11


இவரைப் புரட்சிக் கவி என்று மெய்ப்பிக்க, வடமொழி எதிர்ப்புணர்ச்சியோடு இறுதிவரை வாழ்ந்த பாரதிதாசன்,வடமொழிக் காவியம் ஒன்றைக் கதைப் பொருளாக்கி அதில் சுதந்திர உணர்ச்சியையும் தமிழ் உணர்ச்சியையும் கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறார்.

ஒரு மனிதன் தேவைக்கே இந்தத்தேசம் உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்

என்னும் பாரதிதாசன் முழக்கம்,

தனி ஒருவனுக்கு உணவிலை யெனில்,
ஜகத்தினை அழித்திடுவோம்

என்னும் பாரதியின் முழக்கத்திற்குச் சற்றும் குறைந்ததில்லை.'புரட்சிக் கவி'உருவத்திலும் உள்ளடக்கத்திலும் (Form and Content) பாரதியின் 'பாஞ்சாலி சபத'த்திற்கு நிகரானது. நாடகப் பாங்கில் அமைந்த இக்கவிதையில், கவிஞன் உதாரன் பேசும் பகுதியில் காணும் வேகமும் 'உலகம் உன்னுடையது' என்னும் கவிதையில் காணும் வேகமும் வேறு எந்தக் கவிஞரிடமும் காண முடியவில்லை, ஏன் பாரதிதாசனிடமே பிற்காலத்தில் காண முடிந்ததா?

புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் நின்று தோற்றாலும் பாரதிதாசன் என்றும் மக்கள் மன்றத்தின் பிரதிநிதியாக இருக்கத் தவறியதில்லை. கண்ணீரில் வாழ்க்கை ஒடத்தைச் செலுத்திய விதவைகளின் கொடுமையைப் பாரதி உரைநடையில் எழுதினான். பாரதிதாசன் கவிதையில் எழுதினார். ஏற்றத்தாழ்வற்ற சோசலிச சமுதாய மலர்ச்சியின் அருமையும் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் பெருமையும் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் மூடப்பழக்க வழக்கங்களின் சிறுமையும் பாரதிதாசனின் பாடற் பொருள்கள்.