பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத் தமிழ்க்கவிதை ❖ 4

வருகைக்குப் பின்னர்தான் கவிதைப் பற்றிக் கவிஞர்களின் உரையாடல் அதிகம் இடம்பெற்றது எனலாம். அதற்கான தேவையையும் காலம்தான் உருவாக்கியது. மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் நடந்த போராட்டத்தில் புதுக்கவிஞர்கள் கவித்துவம் பற்றியும் உள்ளடக்கம் பற்றியும் ஒருபுறம் பேச மரபுக்கவிகள் உருவம் பற்றியும் கவித்துவம் பற்றியும் எதிர்வாதம் செய்ய 'எது கவிதை' என்ற ஆய்வு கூர்மையும் சுவையும் மிளிர வெளிப்படத் தொடங்கியது.

பாரதி மேலைக் கவிஞர்கள் கீழைக் கவிஞர்களைத் தொட்டுக் காட்டினான். ந.பிச்சமூர்த்தி தொடங்கி இன்றுவரை பல கவிகள் கவிதையின் அடிமுடி தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நடந்த கருத்தரங்குகள், ஆய்வரங்குகளில் கவிஞர்கள் தத்தம் கொள்கைகளை வெளியிட நிர்ப்பந்தமும் வாய்ப்பும் நேர்ந்தது. விளைவாக புதுக்கவிதைக் காலத்தில் கவிதையாக்கத்தைவிட கவிதை பற்றிய சர்ச்சையே அதிகம் நடந்தது எனலாம். மேலை நாட்டில் கோல்ரிட்ஜ், வேர்ட்ஸ்வர்த், ஆர்னல்டு, எலியட், யேட்ஸ், பவுண்ட் போன்ற கவிகள் கவிதை பற்றி அதிகம் பேசியுள்ளதுபோல தமிழில் ந.பிச்சமூர்த்தி, சார்வாகன், மீரா, மு.மேத்தா, அப்துல் ரகுமான், ஞானக்கூத்தன், தருமு சிவராமு, சிற்பி போன்ற கவிஞர்கள் கவிதை குறித்துக் கூறியுள்ளவை கவனத்திற்குரியன.

(இன்றையத் தமிழ்க்கவிதை உலகில் முன்னணிக்கவிஞர்களில் ஒருவர் கவிஞர் மீரா.) அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியவை பேசியவை இங்கு நூல் வடிவில் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை கறாரான விமர்சனத் தொனியில் அமையவில்லை. சந்தர்ப்பம்,