பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிந்தது ஒட்டுக்கேட்ட ரகசியம் என்று முடியும் ஏ.ஜியின் வாட்டர்கேட் என்ற கவிதையும் அழகாயில்லாததால் அவள் எனக்குத் தங்கையாகிவிட்டாள் என்ற கலாப்ரியாவின் கவிதையும் இம்மூன்று அம்சங் களையும் கொண்டிருக்கக் காணலாம். இத்தகைய துணுக்கு வடிவக் கவிதைகளை விரைவில் படித்து முடிப்பதைப் போலவே விரைவில் மறந்துவிடவும் நேரலாம். இவற்றில் கலையழகு தோன்றவும் இலக்கிய மணம் கமழவும் ஒலிநயம் சிறக்கவும் எழுதப்படும் கவிதைகள் இல்லாமல் இல்லை. நேற்றுப்போலவே இன்றும் இன்றுபோலவே நாளையும் என்றால் நாளை எதற்கு? என்ற ஜெகனாத ராஜாவின் கவிதை வரிகளும் சரி கூண்டுக்கிளிக்குப் பிறந்த குஞ்சுக் கிளிக்கு எப்படி ஏன் வளர்ந்தன சிறகுகள்? என்னும் கல்யாண்ஜியின் கவிதை வரிகளும் சரி, பொன்மொழிகள்போல் நெஞ்சில் இடம்பிடித்துக் கொள்கின்றன. இவற்றைப்படித்து முடித்தபிறகும்கூட நம் வாய் முணுமுணுக்கத்தானே செய்கிறது. எல்லா இலக்கிய வகைகளையும் எல்லா இலக்கிய உத்திகளையும்கூட தனக்குரிய உருவமாக்கிக் கொள்ளும் வண்ணம், புதுக்கவிதை வளைந்து கொடுக்கிறது. இதுவே அதன் அமோக விளைச்சலுக்கு முக்கியமான காரண மாகும்.