பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"என்விழிகள் அவ்விழியைச் சத்திக்குங்கால்
என்ன விதம் நடப்ப" தென யோசிப்பாள் பெண்;
ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தே அன்னோன்
ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்
                                           வாள்?

சின்னவிழி ஒளிபெருகும் ! இதழ் சிரிக்கும்!
திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக்கொள்வாள்!
"இன்னவர் தாம் என் அத்தான்” என்றே அந்த
எழிற் புனிதையிடம் விரல் சுட்டாது சொன்னாள்!

பொன் முடியோ முகநிமிர்த்து வானி லுள்ள
புதுமையெலாம்காண்பவன் போல்பூங்கோதைதன்
இன்பமுகம் தனைச் சுவைப்பான் கீழ்க்கண்ணாலே,
‘இப்படியா’ என்று பெரு மூச்செறிந்தே,
"என் பெற்றோர் இவள் பெற்றேர் உறவு நீங்கி
இருப்பதனால் இவனளென்னை வெறுப்பாளோ, நான்
முன்னிருந்த உறவுதனைத் தொடங்கலாமோ
முடியாதோ" என்று பல எண்ணி நைவான்.

எதிர்ப்பட்டார்! அவன் பார்த்தான்; அவளும்
                                      [பார்த்தாள்
இரு முகமும் வரிவடிவு கலங்கிப், பின்னர்,
முதல் இருந்த நிலைக்குவர, இதழ் சிலிர்க்க,
முல்லைதனைக் காட்டி, உடன்மூடி, மிக்க
அதிகரித்த ஒளிவந்து முகம் அளாவ,
அடிமூச்சுக் குரலாலே ஒரே நேரத்தில்
அதிசயத்தைக் காதலொடு கலந்த பாங்கில்
"அத்தான்" "பூங்கோதை" என்றார்!நின்றார்
                                     [அங்கே

10