பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படிகத்துப் பதுமை போன்றாள்
நீந்துவாள் ஒருத்தி! பாங்காய்

வடிகட்டும் அமுதப் பாட்டை
வானெலாம் இறைப்பாள் ஓர்பெண்!

கடிமலர் மீது மற்றோர்
கைம்மலர் வைத்துக் கிள்ளி,

மடி சேர்ப்பாள் மற்றொருத்தி!
வரும்; மூழ்கும் ஓர் பொன் மேனி!

புனலினை இறைப்பார்! ஆங்கே
பொத்தென்று குதிப்பார் நீரில்!

“எனைப்பிடி” என்று மூழ்கி
இன்னொரு புறம்போய் நிற்பார்!

புனை உடை அவிழ்த்துப், பொய்கைப்
புனலினை மறைப்பார் பூத்த

இனமலர் அழகு கண்டே
'இச்' சென்று முத்தம் ஈவார்.

மணிப்புனல் பொய்கை தன்னில்
மங்கைமார் கண்ணும், வாயும்,

அணிமூக்கும், கையும் ஆன
அழகிய மலரின் காடும்,

மணமலர்க் காடும் கூடி.
மகிழ்ச்சியை விளைத்தல் கண்டோம்?

அணங்குகள் மலர்கள் என்ற
பேதத்தை அங்கே காணோம்!

7