பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

சு. சமுத்திரம் ☐

அடுத்தபடியாக சு.சமுத்திரம் என்ற பெயரில் ஒரு நாவல் வரவேண்டும் என்று நியூஸ் செஞ்சுரி புக் நிறுவனத்தின் தலைவரும், மார்க்சிய அறிஞருமான திரு. ராதாகிருஷ்ணனனும், செயலாளர் குசேனும் கேட்டு கொண்டதற்கு இணங்க இந்தக் குறுநாவலை எழுதினேன். ஆனால் பத்திரிகை ஆசிரியர் ஜெயகாந்தன் அடுத்த ஆறு மாதங்களுக்கான எழுத்தாளர் பட்டியலைப் போட்டு விளம்பரம் செய்துவிட்டார். அசோகமித்திரன், ச.கந்தசாமி போன்ற எழுத்தாளர்களின் பட்டியல் அது. அந்த அறுவர் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் நான் மனம் தளரவில்லை. அதையே பெரிய நாவலாக எழுதப் போனேன். இந்தச் சமயத்தில் தேவி பத்திரிகையில் ஒரு தொடர் கதை கேட்டார்கள். இதே நாவலை “ஊருக்குள் ஒரு புரட்சி” என்ற பெயரில் தேவியில் எழுதினேன். இந்த நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இதைத் திரைப்படமாகவும் தயாரித்தார்கள். உருப்படவில்லை. ஆனாலும் இந்திய அரசின் செய்தி விளம்பரத் துறையில் இந்தப் படம் 16 எம் எம் களாக ஆங்காங்கே திரையிடப்படுகின்றது.

இந்த நாவல் சம்பந்தப்பட்ட திரைப்பட அனுபவத்தையும், உங்களுடன் பகிர்ந்தால்தான் எனக்கு சுமை குறையும். ‘ஒரு இந்தியக் கிராமத்தின் கனவு’ என்ற திரைப்படத்தை தயாரித்து, விருது பெற்ற திருவாளர்கள் தேசிகன், வரதராஜன் ஆகியோர் இந்தப் படத்தையும் தயாரித்தார்கள். பணம் செலவாகிறது என்று அழுதுகொண்டே இந்தப் படத்தைத் தயாரித்தார்கள். டைரக்டராக ஆசை பட்ட ஒருவர் இவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். கொடுத்தது கடன்.