196
சு. சமுத்திரம் ☐
என்றும், அதற்குப்பிறகு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்றும், தேம்பித்தேம்பி அழுதழுது சொன்னாள். ஊரார் இதை நம்பவில்லை தான். ஆனாலும் அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், அப்படி மருந்து போட்டுத்தான் அவள் மயக்கமாகி போய்விட்டாள் என்று அவள் சொன்னதை அங்கீகரிப்பதைப் போல் தலையாட்டிவிட்டு - அதேசமயம் தங்களுக்குள் கண்சிமிட்டியபடியே போய்விட்டார்கள். இப்படி ஓடிப்போன ஒருத்தியை ஊரார் ஒப்புதலோடு குடும்பம் கவுரமாக ஏற்றுக் கொண்டது. இந்த நிகழ்ச்சியையும், ஒருகாலத்தில் சைக்கிள்காரனை அவன் சைக்கிளுக்காக பார்த்த மகளை, அடித்துக் கொன்ற அப்பனையும் இணைத்து ஒரு சிறுகதை உருவாக்கினேன். எந்த மகளை அடித்துக் கொன்று அதைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறாரோ அந்தக் கிழவனின் பேத்தி, இப்படி ஓடிப்போய்விட்டு அந்தக் கிழவன் கண்முன்னாலேயே வீட்டுக்குள் ஜம்மென்று போவதாக கதையை முடித்தேன். கொலைகார கணவனுடன் பேசாமலே நாற்பது ஆண்டுகளை கடத்திவிட்ட அந்த கிழவனின் மனைவி, அந்தக் கிழவனுக்கு கண்களால் சாட்டையடி கொடுப்பதாகவும் விளக்கினேன். தலைமுறை இடைவெளியையும், மாறிவரும் நெறிகளையும், ஒருவன் மாறவில்லை என்றாலும், காலம் தன்பாட்டுக்கு மாறிக் கொண்டே இருக்கும் என்பதையும் சித்தரிக்கும் இந்தச் சிறுகதை எனக்கு பிடித்த எனது சிறுகதைகளில் ஒன்று.