பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரிமையாளர் பேராசிரியர் ச. மெய்யப்பன். கடந்த 25 ஆண்டு காலமாக என் படைப்புக்களை தொடர்ந்து பிரசுரிப்பவர். இந்த நூலகத்தின் முக்கிய பங்காற்றிய நாவலாசிரியர் திரு. நாராயணன் அவர்கள் “புரூப்பில்” என் கதைகளைப் படித்துவிட்டு அதன் நயங்களை எடுத்துரைக்கும்போது மெய் மறந்து போவேன். மேலும், மேலும் என்னை எழுதத் துண்டியவர் இவர். இவரும், என் படைப்புக்களை பல அரங்குகளில் எடுத்துரைத்த பேராசிரியர் மெய்யப்பனும், என் எழுத்துக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். திரு. நாராயணன் இடத்தில் இப்போது அமர்ந்திருக்கும், திரு. குருமூர்த்தி அதே பாரம்பரியத்தை என்னிடம் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். (அந்தக் காலத்தில் கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதனுக்கு உற்சாகமூட்டுவதற்காக இளையராஜாவை பத்திரிகையில் தாக்கியபோது, கவிஞரின் நெருங்கிய நண்பரான நாராயணன் அவர்கள் மூலம் அந்த தாக்குதலை நிறுத்தியவன் நான்) மணிவாசகர் நூலகத்திற்கு அடுத்தபடியாக எனக்கு ஆக்கமும், ஊக்கமும் தருகிறவர் வானதி பதிப்பக உரிமையாளர் பெரியவர் திருநாவுக்கரசு அவர்கள்.

திறனாய்வாளர்கள்...

ஆங்கிலத்திலும், தமிழிலும் வல்லமை வாய்ந்த வலம்புரிஜான், பேராசிரியர்கள் ரபீர்சிங், இளவரசு, பொற்கோ, தி.சு. நடராசன், ராமகுருநாதன், ராமன், ராஜாராம், ராமலிங்கம், சிவசுப்பிரமணியம், சு. வெங்கடராமன், எம்.எஸ். ராமசாமி, சரஸ்வதி ராம்நாத், ஒரு கோட்டுக்கு வெளியே நாவலை இந்தியில் மொழிபெயர்த்த திருமதி.விஜயலட்சுமி சுந்தர்ராஜன், தொடக்க காலம் முதல் என்னை ஆக்க ரீதியாக அணுகும் டி.எஸ். ரவீந்திரதாஸ், இந்து பத்திரிகையின் சி.வி.ஜி. விமர்சகர் சுந்தரேசன் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் என்னை இன்னும் எழுதும்படி சொல்லாமல் சொல்கிறவர்கள். கோவை ஞானி அவர்களின் அண்மைக்கால நட்பும், கடிதங்களில் புலப்படுத்தும் அவரது இலக்கிய மேதமையும் என் எதிர்கால படைப்புகளை மேலும் செழுமைப்படுத்தும் என நம்புகிறேன். சக படைப்பாளிகள் என்ற முறையில் டி. செல்வராஜ், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, செ. யோகநாதன், கு. சின்னப்ப பாரதி, மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், தேனி சீருடையான், தோப்பில் முகம்மது மீரான், சுப்ரபாரதி மணியன், ரோஜா குமார், வேல. ராமமூர்த்தி,