பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

25

நினைவு வெள்ளமாக ஓடத் துவங்கியது. இளமையில் கணவனை இழந்து கைம்பெண்ணான என் அன்னையை சொந்த ஜாதியினர் நடத்திய விதமும், என் அம்மா எனக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டதும், நினைவுக்கு வந்தன. இதேபோல் எனது சாதியினரான நாடார்களே அந்தச் சாதியில் உள்ள பதநீர் இறக்கும் பாட்டாளிகளை “பனையேறிப் பயலே” என்று திட்டுவது திடீர் நினைவாகியது. எனக்கு பத்து வயது இருக்கும்போது பக்கத்தூரில் நடந்த ஒரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. வயதுக்கு வந்த ஒரு ஏழைப் பெண்ணை கிட்டத்தட்ட அதே வயதுள்ள ஒரு பண்ணையார் - வாலிபன், சாட்டைக்கம்பால் அடித்துக் கொண்டிருந்தான். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவன் செய்வது அடாவடித்தனம் என்பதை அறிந்தவர்கள் போல் முணுமுணுத்தார்கள். ஆனால் எவரும் எதிர்ப்பைக் காட்டவில்லை. இந்த “செல்லாக் கோப”ப் பொறுமை சாலிகளின் இயலாமையால் நான் கொதித்துப் போனேன். அதே சமயம் என்னாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால், அந்தப் பெண் அவன் கொடுத்த அடிகளையெல்லாம், கம்பீரம் கலையாமல் வாங்கிக் கொண்டே, அவனும், அவன் குடும்பத்தாரும் செய்த அயோக்கியத்தனத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். தன்னந்தனியாக ஒரு முரடனை சகல பலவீனங்களுடனும் பலமாகச் சாடிக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சியை நான் ஊருக்குத் திரும்பிய பிறகும் பல இரவுகளில் திடுக்கிடும் கனவாகக் கண்டதுண்டு.