பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சு. சமுத்திரம் ☐

தான் நான் இருந்த இடத்தில் குடித்தனக்காரர்கள். இங்கே இருந்து லாரி டிரைவர்களும், காய்கறி புரோக்கர்களும், இந்த மக்களுக்கு “விஐபி” க்கள். வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் பேட்டை ரவுடிகள் கத்தியோடு உட்கார்ந்து கொண்டு, உரையாடுவதும், அதேசமயம் தாங்கள் இருக்கும் பகுதியில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற கொள்கையை, பொதுவாக அவர்கள் கடைபிடித்ததும் நான் கண்கூடாகப் பார்த்தது. இந்தச் சூழலில் பட்டப்படிப்பைப் படித்து வந்த எனக்கு, கிட்டத்தட்ட டாக்டரேட்டிற்குரிய ஒரு கல்வியும் கிடைத்தது. கோணி வியாபாரியான எனது சித்தப்பா வீடு இரண்டு அறைகளைக் கொண்டது. ஒன்றில் சுமார் ஆயிரம் கோணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இவற்றை ரெங்கசாமி செட்டியார் என்ற ஒருவர் தைத்துக் கொடுப்பார். காலையில் ஏழு மணிக்கு வந்தால் இரவில் ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்குப் போவார். இவர், பர்மாவிலிருந்து இரண்டாவது உலகப்போரில், தமிழகத்திற்கு அகதியாக வந்த தெலுங்குச் செட்டியார். இவருடைய தந்தை பர்மாவில் பிரபலமாக விளங்கியவராம். பர்மாவிலிருந்து காடு வழியாகத் தப்பி வரும் போது எத்தனையோ உயிர்கள் குண்டுகளுக்குப் பலியாவதையும், வயதானவர்களையும் நோயாளிகளையும், சொந்தக்காரர்கள் காடுகளிலேயே விட்டு விட்டு வந்ததையும் இவர் சொல்லும் போது, கண்களில் கண்ணீர் உருக்கும். இவர் புத்தபிட்சுக்களிடமும், சில சந்நியாசிகளிடமும் பழக்கப்பட்டவர். சித்த வைத்தியத்தில் நிபுணர். ஒரு தடவை குத்துக்கல்லாக இருந்த என் சித்தியின் நாடியைப் பார்த்துவிட்டு, “மரணநாடி