பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

எதிர்ப்புகள் எங்கு காணப்பட்டாலும் அது ஏதோ சில சடங்குகளை அழித்து விடுகிறோம், ஒழித்துவிடுகிறோம். என்பதற்காகத்தான் காணப்படுகிறது.

சங்கராச்சாரியாரிலிருந்து சாதாரண அய்யரிலிருந்து, சாதாரண சாமியார் வரை. படித்தபார்ப்பனர்களிலிருந்து, படிக்காத பாமரர்வரை, அவர்கள் யாராக இருப்பினும் இதுவரை சீர்திருத்த முறையில்தான் திருமணங்கள் நிகழ வேண்டும் என்பதற்காக சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் கூறிவரும் காரணங்களை ஒருவரும் மறுத்துப் பேசியது கிடையாதே!

அவர்கள் நாங்கள் கூறும் காரணங்களை மறுத்துப் பேசுவதில்லை. பேசவும் முடிவதில்லை. ஆனால் அர்த்தமற்ற சடங்குகளை பொருத்தமற்ற காரணங்களைக் காட்டிக் கடைப்பிடிக்கவில்லை யென்றுதான் குற்றஞ் சாட்டுகிறார்கள்.

நாங்கள் மேற்கூறப்பட்ட எந்தவிதமான சடங்குகளையும் செய்வதில்லை. செய்ய தேவை இல்லையென்றும் கூறுகிறேம். அத்தகைய சடங்குகளைச் செய்வதற்கு எந்த விதமான அர்த்தமுமில்லை. அதற்குக் கூறப்படும் காரணங்களும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவைகளை நாங்கள் செய்வதில்லை யென்பதுடன் செய்வதும் கூடாது எனவும் குறிப்பிடுகிறோம்.

இந்த சடங்குகளை நாம் ஏன் செய்யவேண்டும்? அவைகளை, விட்டுவிட்டால் என்ன? என்ற கேள்விகளுக்கு அவைகள் அந்தக்காலத்திலிருந்து இருந்துவரும் பழக்கங்களாயிற்றே! அவைகளை எப்படி விட்டுவிட முடியும் என்ற முறையில்தான் புதில் கிடைக்கிறது. வேறு ஏதாவது தக்க காரணங்கள், பொருத்தமான பதில்கள், அர்த்தமுள்ள, அறிவுக்கும் பொருத்தமான விளக்கங்கள் தரப்படுகின்றனா? கிடையாதே!