பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

வாங்கச் சென்ற அக்கினிபகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டுத் தன் மனைவியிடமே கூறினானாம். இந்தக் காலத்தில் எப்படி பட்ட கேடுகெட்ட மனிதனுங்கூட தான் கட்டிய மனைவியிடம், தான் பிற பெண்ணின்மீது ஆசை வைத்திருப்பதாகக் கூறமாட்டான். ஆனால் ஆண்டவனான அக்கினி தன் மனைவியிடம் தான் ரிஷிபத்தினியிடம் காமுற்று இருப்பதைக் கூறியவுடன் தன் மனைவியரையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படிக் கேட்டானாம். அவன் மனைவியும் சப்த ரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போலவே உருவமெடுத்து தன் கணவனின் காமத்தைத் தடுத்தாளாம். ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப்போல் மட்டும் உருவம் மாறவில்லை என்றும், அதற்குக் காரணம், அருந்ததி ஆதித்திராவிடப் பெண்மணி என்றும் புராணம் மேலும் தொடருகிறது.

பிறர் மனைவியைக் காமுறும் தீய குணம் படைத்த அக்கினியையா நம்முடைய திருமணக் காலங்களிலே சாட்சிக்கு அழைப்பது? கூடாது கூடவே கூடாது. ஆகவே தான் அக்கினி வளர்ப்பதில்லை. இப்படித்தானே மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள்? புராணங்கள் சொல்லுகிற படியே பார்த்தாலும், எந்தக் கடவுளும் யோக்கியமான கடவுளாகத் தெரியவில்லையே! பிரமன் திலோத்தமையைக் கெடுத்தான். சிவன் தாருகா வனத்து ரிஷிபத்தினிகளைக் காமுற்றான். இந்திரன் அகலிகையையும், சந்திரன் குரு பத்தினி தாரையையும், மகாவிஷ்னு சலந்திரன் மனைவியையும் கெடுத்தனர். இப்படித் தான் புராணங்கள் சொல்கின்றன.

இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான கடவுளையா நாம் நமது விழாவிற்கு வழிகாட்டியாகக் கொள்வது? காமக் குரோதம் மிகுந்த அக்கினி பகவானை அழைத்து அவனைச் சாட்சியாக வைத்துத் திருமணம் நடத்துவது அறிவுக்குப் பொருத்தமானதுதானா? அதைப்போலவே கண்மூடித்தனமாக

எ.தி.ப-4